கட்சியில் யாரும் இறுமாப்புடன் இருக்கக்கூடாது: தமிழக பா.ஜ.,வினருக்கு சந்தோஷ் அறிவுரை
சென்னை : “ இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது.தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும். பா.ஜ.,வில், 'நான் தான் பெரியவன்' என்று யாரும், இறுமாப்புடன் இருக்கக்கூடாது. ,” என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை தி.நகர் கமலாலயத்தில், நடந்தது.
கூட்டத்தில், சந்தோஷ் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 50 - 60 நாட்கள் கூட கிடையாது. அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., உட்பட பல கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டில், பா.ஜ.,வுக்கு 20 சதவீத தொகுதிகள் கிடைக்கும்; அங்கு மட்டும் நாம் போட்டியிடுவதாக பா.ஜ.,வினர் கருதக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பா.ஜ., பூத் கமிட்டி என்று கருதாமல், தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சியினருடன் அனுசரித்து செல்ல வேண்டும். இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது. எனவே, தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும்.
பா.ஜ.,வில், 'நான் தான் பெரியவன்' என்று யாரும், இறுமாப்புடன் இருக்கக்கூடாது. சட்டசபை தேர்தலில், எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கவில்லை என்றால், மற்றவர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். உழைக்கும் எல்லாருக்கும், எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படும்.
தி.மு.க.,வின் ஊழல்களை வீடுதோறும் மக்களிடம் கொண்டு சென்று, அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். உட்கட்சி விவகாரம், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேலும்
-
'அமெரிக்க வரி உயர்வுக்கு பிறகும் பின்னலாடை ஏற்றுமதி சரியவில்லை'
-
உணவு தொழிலில் வாய்ப்புகளை அறிய சேலத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பு
-
'இந்தியன் கேஷூ' பிராண்டு முந்திரி ஏற்றுமதிக்கு ஊக்கம்
-
டெக்ஸியான் நிறுவனத்துக்கு சென்னையில் புது அலுவலகம் 2,000 வேலைவாய்ப்பு உருவாகும்
-
கடந்தாண்டு 2.80 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதியில் சாதனை
-
போர் விமான மின்னணு பாகம் தயாரிக்க ஆர்டர்