தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: மார்க்ரம் அரைசதம் விளாசல்

ஆமதாபாத்: கனடாவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், கேப்டன் மார்க்ரம் அரைசதம் விளாச தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 213 ரன் குவித்தது.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, கனடா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கனடா அணி கேப்டன் தில்பிரீத் பஜ்வா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்: தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டிலோன் ஹெய்லிகர் வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார் மார்க்ரம். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த குயின்டன், சாத் பின் ஜாபர் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய மார்க்ரம், ஜஸ்கரன் சிங் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது தில்பிரீத் பஜ்வா பந்தில் குயின்டன் (25) போல்டானார்.

மார்க்ரம் அபாரம்: தில்பிரீத் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்க்ரம், 28 பந்தில் அரைசதம் எட்டினார். அடுத்து வந்த ரியான் ரிக்கிள்டன், சாத் பின் ஜாபர் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது அன்ஷ் படேல் பந்தில் மார்க்ரம் (59) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய அன்ஷ் படேல் 'சுழலில்' ரிக்கிள்டன் (33), டிவால்டு பிரவிஸ் (6) சிக்கினர்.

சூப்பர் ஜோடி: பின் இணைந்த டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி கைகொடுத்தது. பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய ஸ்டப்ஸ், ஜஸ்கரன் சிங் வீசிய 18வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். கலீம் சனா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஜஸ்கரன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டப்ஸ், தன்பங்கிற்கு ஒரு சிக்சர் அடிக்க, 21 ரன் கிடைத்தது.

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்தது. மில்லர் (39 ரன், 23 பந்து, 3x6, 1x4), ஸ்டப்ஸ் (34 ரன், 19 பந்து, 2x6, 2x4) அவுட்டாகாமல் இருந்தனர். கனடா சார்பில் அன்ஷ் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement