ஓமனை வென்றது ஜிம்பாப்வே: 'டி-20' உலக கோப்பையில்

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
இலங்கையின் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் ஓமன், ஜிம்பாப்வே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.


வினாயக் ஆறுதல்: முதலில் 'பேட்' செய்த ஓமன் அணிக்கு, முசராபானி தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் ஜதிந்தர் சிங் (5), ஆமீர் கலீம் (5), கரண் சோனாவாலே (0) வெளியேறினர். ஹம்மாத் மிர்சா (0), வாசிம் அலி (3) ஏமாற்றினர். ஓமன் அணி 27 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து திணறியது.
ஆறாவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது ரிச்சர்ட் பந்தில் வினாயக் (28) அவுட்டானார். ஜிதேன் (1) சோபிக்கவில்லை. பிராட் ஈவன்ஸ் பந்தில் சுப்யான் (25), ஷகீல் அகமது (4) அவுட்டாகினர். நதீம் கான் (20) ஓரளவு கைகொடுத்தார்.


ஓமன் அணி 19.5 ஓவரில் 103 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஷா பைசல் (5) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் முசரபானி, ஈவன்ஸ், ரிச்சர்ட் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

பென்னட் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரைன் பென்னட், மருமானி (21) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின் பென்னட், பிரண்டன் டெய்லர் ஜோடி இணைந்தது. நதீம் கான் வீசிய 11வது ஓவரில் பென்னட் 2, டெய்லர் ஒரு பவுண்டரி அடிக்க 15 ரன் கிடைத்தது. இந்த ஜோடி 68 ரன் சேர்த்திருந்த போது காயம் காரணமாக டெய்லர் (31), 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் சிக்கந்தர் ராஜா, கரண் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

ஜிம்பாப்வே அணி 13.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பென்னட் (48 ரன், 7x4), சிக்கந்தர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஓமன் சார்பில் சுப்யான் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ஜிம்பாப்வேயின் முசரபானி வென்றார்.


சிக்கந்தர் முதலிடம்


'டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய ஜிம்பாப்வே வீரர்கள் வரிசையில் சீன் வில்லியம்சை (14) முந்தி முதலிடம் பிடித்தார் கேப்டன் சிக்கந்தர் ராஜா. இதுவரை 15 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சூப்பர் கீப்பர்

மூன்று 'கேட்ச்' செய்த பிரண்டன் டெய்லர், 'டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஜிம்பாப்வே கீப்பர்கள் பட்டியலில் சகப்வாவை (5) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை 8 விக்கெட் (7 'கேட்ச்', 1 'ஸ்டெம்பிங்') விழ காரணமாக இருந்துள்ளார்.

முசராபானி '15'

'டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜிம்பாப்வே பவுலர்கள் பட்டியலில் சிக்கந்தர் ராஜாவை (14 விக்., 15 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் முசராபானி. இதுவரை 9 போட்டியில், 15 விக்கெட் சாய்த்துள்ளார்.

கலக்கல் ஜோடி

68 ரன் சேர்த்த பிரைன் பென்னட், பிரண்டன் டெய்லர் ஜோடி, 'டி-20' உலக கோப்பை வரலாற்றில், 3வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜிம்பாப்வே ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், கிரெய்க் எர்வின், சீன் வில்லியம்ஸ் ஜோடி 35 ரன் சேர்த்திருந்தது.

Advertisement