இந்திய அணியின் அதிர்ஷ்டம் சூர்யகுமார்: பயிற்சியாளர் காம்பிர் மகிழ்ச்சி

புதுடில்லி: ''இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் இருப்பது அதிர்ஷ்டம். எனது பயிற்சியாளர் பணியை எளிதாக மாற்றி விடுகிறார்,'' என காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய 'டி-20' அணி கேப்டனாக சூர்யகுமார் 35, கடந்த 2023ல் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி ஒரு முறை கூட 'டி-20' தொடரை இழந்ததில்லை. ஆசிய கோப்பை உட்பட 10 'டி-20' தொடர்களுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், 9ல் கோப்பை பெற்றுத்தந்தார். ஒரு தொடர் மட்டும் சமன் ஆனது. 41 போட்டியில் 33ல் வெற்றி (6 தோல்வி) பெற்றுத்தந்தார். இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை. வெற்றி சதவீதம் 80.48 ஆக உள்ளது.


தற்போது 'டி-20' உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் (எதிரணி-அமெரிக்கா), 84 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். அடுத்து இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில், நமீபியாவை சந்திக்க உள்ளது.


இதுகுறித்து பயிற்சியாளர் காம்பிர் 44, கூறியது: 'டி-20' அணியில் எனது பயிற்சியாளர் பணியை எளிதாக மாற்றி விடுகிறார் கேப்டன் சூர்யகுமார். களத்தில் எப்படிச் செயல்படுகிறார், பேட்டராக எப்படி விளாசுகிறார், அவரது 'ஷாட்டுகள்' எப்படி உள்ளன என்ற அனைத்தையும் விட, வியக்கத்தக்க தலைமை பண்பு கொண்டவராக திகழ்கிறார்.

சக வீரர்களுடன் பேசுவது, பழகுவது, நேரத்தை செலவிடுவது என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுகிறார். அணியில் எப்போதும் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று தான் எந்த பயிற்சியாளரும் விரும்புவார். இதை சூர்யகுமார் சரியாகச் செய்கிறார். இதனால் பயிற்சியாளர், அணியின் வெற்றிக்காக, கூடுதலாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் பணியில் சூர்யகுமார் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார் என நினைக்கிறேன். இவரைப் போன்ற ஒருவர், வழிநடத்துவது இந்திய அணியின் அதிர்ஷ்டம் எனலாம். ஏனெனில், நெருக்கடியான சூழ்நிலையில் நிதானமாக செயல்பட்டு, சரியான முடிவை எடுக்கிறார்.


இவ்வாறு அவர் கூறினார்.

காம்பிர் வீட்டில் விருந்து
இந்தியா, நமீபிய அணிகள் மோதும் 'டி-20' உலக கோப்பை லீக் போட்டி, பிப். 12ல் டில்லியில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணியினர் டில்லி வந்துள்ளனர். இவர்களுக்கு, பயிற்சியாளர் காம்பிர் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வந்த வீரர்களை, காம்பிர், அவரது மனைவி, 2 குழந்தைகள் வரவேற்றனர்.

கிளம்பிய அபிஷேக்


அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, பீல்டிங் செய்ய களமிறங்காத இவர், போட்டி முடிந்த பின்பும் மைதானத்துக்கு வரவில்லை. இதற்கு,' வயிற்று பிரச்னை தான் காரணம்,' என்றார் சிராஜ். இதனிடையே காம்பிர் வீட்டு விருந்துக்கு வந்த அபிஷேக், விரைவில் ஓட்டலுக்கு திரும்பினார். மற்ற வீரர்கள் நள்ளிரவு தான் சென்றனர்.

வருகிறார் வாஷிங்டன்
இந்திய அணி சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 26. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, விலா எலும்பு காயத்தால் விலகினார். தற்போது குணமடைந்த நிலையில், நமீபிய போட்டிக்கு முன், இந்திய அணியுடன் இணைய உள்ளார். ஹர்ஷித் ராணா விலகி நிலையில், வாஷிங்டன் வருகை அணிக்கு கைகொடுக்கலாம்.

Advertisement