வறட்சியின் பிடியில் கென்யா


கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, கென்யாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள துர்கானா மாகாணம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. மழை பொய்த்ததால் விவசாயம் அழிந்து, கால்நடைகள் மடிந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
Latest Tamil News
துர்கானா மாகாணத்தில் உள்ள நலெம்காய்ஸ் கிராமத்தில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குடிநீருக்கும் உணவுக்கும் மைல் கணக்கில் நடக்க வேண்டிய சூழலில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாதங்களாக மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடப்பதால், இவர்களின் முக்கிய வாழ்வாதாரமான ஆடு மற்றும் மாடுகள் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கின்றன.
Latest Tamil News
இந்த இக்கட்டான சூழலில், 'வேர்ல்ட் விஷன் கென்யா' போன்ற சர்வதேச தன்னார்வ அமைப்புகள் களத்தில் இறங்கி உதவி வருகின்றன. நலெம்காய்ஸ் கிராமத்தில் அந்த அமைப்பு சார்பில் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது, அங்கு ஒரு நெகிழ்ச்சியான மனிதாபிமானத்தைக் காண முடிகிறது. தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப அளவிலான உணவையும், அக்கம் பக்கத்தினரோடு பகிர்ந்து கொண்டு அந்த மக்கள் உயிர் பிழைக்கப் போராடுகிறார்கள்.

நிவாரணப் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், வறட்சியின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றம் ஆப்பிரிக்க நாடுகளை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதற்கு துர்கானா ஒரு சாட்சியாக நிற்கிறது. இங்குள்ள மக்களுக்கு உடனடி உணவு உதவியுடன், நீண்ட காலத் தீர்வாக ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீடித்த விவசாய முறைகள் அவசியமாகின்றன.

துர்கானா மக்களின் இந்தத் துயரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டிய ஒன்று. வேர்ல்ட் விஷன் போன்ற அமைப்புகளின் உதவி ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், அந்த மக்கள் மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சி தேவையாய் இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளில் இருந்தும் நாம் பாடம் கற்கவேண்டும் ஒவ்வொரு முறை தண்ணீரை நாம் உபயோகிக்கும் போது இவர்களை நினைத்துக் கொண்டால் அதை வீணாக்கமாட்டோம்.

-எல்.முருகராஜ்

Advertisement