லெபனான் கட்டடம் இடிந்து விபத்து; 15 பேர் பலி, 8 பேர் மீட்பு

பெய்ரூட்: லெபனானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், இடிபாடுகளில் சிக்கிய எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.


மேற்காசிய நாடான லெபனானில் ஏராளமான பழைய கட்டடங்கள் உள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால் அங்கு கட்டட விபத்து என்பது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாணமான திரிப்போலியில், பாப் அல் தபானே என்ற பகுதியில்,நேற்று முன்தினம் மாலை குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து தரைமட்டமானது.


இந்த விபத்து நிகழ்ந்தபோது 20க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் இருந்துள்ளனர். இதில் 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்; எட்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இது சமீபகாலங்களில் திரிப்போலியில் நிகழ்ந்த ஐந்தாவது கட்டட விபத்தாகும். அங்கு மட்டும் 105 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement