டில்லியில் ஏ.ஐ., மாநாடு ஸ்டார் ஹோட்டல் அறை வாடகை 'கிடுகிடு'

புதுடில்லி: டில்லியில் வரும் 16ம் தேதி ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாடு துவங்க உள்ள நிலையில், அங்குள்ள சொகுசு ஹோட்டல்களில் உள்ள அறை வாடகை அதிக பட்சமாக நாளொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வளரும் நாடுகளின் எதிர்கால முன்னேற்றத்தை கருதி, டில்லியில் வரும் 16 முதல் 20ம் தேதி வரை ஏ.ஐ., சர்வதேச மாநாட்டிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், வளரும் நாடுகளின் சுகாதாரம், விவசாயம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏ.ஐ., பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என பலர், தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதற்காக 35,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உள்ளிட் டோர் டில்லிக்கு வருகை தர உள்ளனர்.

இதையடுத்து, இங்குள்ள சொகுசு ஹோட்டல்களின் அறை வாடகைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. வழக்கமாக, டில்லி சொகுசு ஹோட்டல்களில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 40,000 ரூபாய் வரை அறை வாடகை வசூலிக்கப்பட்டது.

இந்த மாநாட்டையொட்டி, சொகுசு ஹோட்டல்களில் உள்ள அறைகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் வாடகையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் 19 மற்றும் 20ம் தேதிகளில், பல சொகுசு ஹோட்டல்களின் அறை வாடகை விலை நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

டில்லியில் உள்ள 'தி லீலா பேலஸ், ஐ.டி.சி., மவுரியா, தாஜ் பேலஸ்' போன்ற முன்னணி சொகுசு ஹோட்டல்கள் ஏ.ஐ., மாநாட்டையொட்டி, அறை வாடகை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

மத்திய டில்லியில் உள்ள கன்னாட் பிளாசாவில் உள்ள, 'தி இம்பீரியல்' ஹோட்டல் அறையின் வாடகை, வரும் 17ம் தேதி இரவுக்கு 2.40 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement