சவுடு மண் லாரிகளை சிறைபிடித்து பெருமாள்பட்டு மக்கள் போராட்டம்

பெருமாள்பட்டு: பெருமாள்பட்டு பகுதியில் நேற்று சவுடு மண் லாரிகளை சிறைபிடித்த மக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வேப்பம்பட்டு - புதுச்சத்திரம் மாநில நெடுஞ்சாலையை, அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், ரயில் பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் சில தினங்களுக்கு பயன்பாட்டிற்கு வந்த ரயில்வே மேம்பாலம் வழியே தினமும் 100க்கும் மேற்பட்ட சவுடு மண் லாரிகள் அசுரவேகத்தில் சென்று வருகின்றன. இதனால், இப்பகுதி மக்கள், மாணவ - மாணவியர் மற்றும் ரயில் பயணியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், அதிக பாரத்துடன் செல்லும் சவுடு மண் லாரிகளால், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளும் சேதமடைகின்றன.

நேற்று காலை 8:00 மணியளவில், பெருமாள்பட்டு ஸ்ரீராம் கல்லுாரி அருகே, ரயில்வே மேம்பாலம் நுழைவு பகுதியில், 10-க்கும் மேற்பட்ட சவுடு மண் லாரிகளை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் செவ்வாப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சு நடத்தினர்.

அப்போது, 'மாற்று வழியில் சவுடு மண் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

அதன்பின், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளில், விதிமீறி அதிகளவில் சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement