இடம் மாறும் பிரதமர் அலுவலகம் 'சவுத் பிளாக்'கில் கடைசி கூட்டம்

புதுடில்லி: ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பார்லிமென்ட், 'சவுத் பிளாக்'கில் தற்போது செயல்படும் பிரதமர் அலுவலகம், 'சேவா தீர்த்' என்ற புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் இந்த கட்டடத்தில் இறுதியாக இன்று நடக்க உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 1900ம் ஆண்டில், அவர்களது தலைமை செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் செயல்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இந்த கட்டடத்தில் பி.எம்.ஓ., எனப்படும், பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்படுகின்றன.

இந்த அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள, 'சேவா தீர்த்' என்ற புதிய இடத்திற்கு இடம் மாறுகின்றன. இதையடுத்து, சவுத் பிளாக்கில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில், இறுதி அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

இதை தொடர்ந்து, பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்த்தவ்யா பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கடந்த, 1921 முதல் நாட்டின் அதிகார மையமாக இருந்த சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

Advertisement