'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
மா.கருணாநிதி,
காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு),
98404 88111- spkaruna@gmail.com
நான் மிகவும் உய்த்து உணர்ந்து ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை, ரத்தன் டாடா அவர்களின் அறிவுரைதான்.
'உயர்ந்த நிலையில் இருக்கும் நிறுவன நிர்வாகிகளும், தலைவர்களும் கூட தங்கள் வாழ்க்கையில் சரிவை சந்திப்பதற்கு காரணம், தங்கள் நிர்வாகம் பற்றிய எதிர்மறை தகவல்கள், தங்களை அணுகவிடாமல் புறம்தள்ளிவிட்டு, முகஸ்துதியாக புகழ்பாடும் கூட்டத்தை தங்கள் அருகிலேயே வைத்துக் கொள்வது தான்' என்று குறிப்பிட்டார்.
இன்று அரசு நிர்வாகத்தை நகர்த்திக் கொண்டிருக்கிற அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும்.
நான் கல்லுாரியில் படித்தபோது ஒரு பேராசிரியர், 'ஆடு, கசாப்புக் கடைக்காரரை நம்புவதுபோல்' என்ற பழமொழிக்கு, காலத்துக்கு ஏற்ற ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார்.
ஆடு மேய்ப்பவன், தன் மந்தையில் இருக்கும் ஆடு, திசைமாறி தவறிப் போய் விடக்கூடாது என்பதற்காக, ஒரு நீண்ட குச்சியை வைத்திருப்பான். ஏதாவது ஒரு ஆடு, மந்தையிலிருந்து விலகிச் செல்ல முற்பட்டாலும், பின்னால் இருந்தபடியே அந்த குச்சியால் அந்த ஆட்டை பக்கவாட்டில் அடித்து தடுப்பான்.
அலட்சியம்
அந்த அடி, ஆட்டின் வலது அல்லது இடது தொடைப்பகுதியில் விழும்; ஆடு மந்தைக்குள் வந்துவிடும். இதேபோல், ஒவ்வொரு ஆடும் விலகிச்செல்லும் போதும், வாங்கிய அடியால் அதன் தொடைப்பகுதியில் மிதமான வலியுடன் கூடிய மதமதப்பு இருக்குமாம்.
அந்த ஆட்டை மாமிசத்திற்காக விலைக்கு வாங்க வரும் கசாப்பு கடைக்காரர், தான் கொடுக்கும் விலைக்கு ஏற்ற மாமிசம் தேறுமா என்று பார்க்க, அதன் தொடைப்பகுதியைத் தான் அழுத்திப் பிடித்துப் பார்ப்பார்.
அந்தப் பிடிப்பு, ஆட்டுக்கு மிகவும் இதமாக இருக்குமாம். அப்போது அந்த ஆடு, 'ஆகா... இவனல்லவோ மனிதன், இவனோடு சென்றால் தினமும் இப்படியே பிடித்துவிடுவான், சுகமாக இருக்கும்' என்று நினைக்கும். பிறகு உண்மையில் என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே!
அதுபோல் அரசும், அதிகாரிகளும் காட்டும் அலட்சியம், அவமரியாதை ஆகியவற்றால் நொந்து போயிருக்கும் மக்களுக்கு, அந்த அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் செய்திகள், மிகைப்படுத்தியதாக இருந்தாலும், காதுக்கு இனிமையாகவும் அதை வெளியிடுபவர்கள் உத்தமர்களாகவும், ஆபத்பாந்தவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை.
'அரசு மீதும், அதிகாரிகள் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, குற்றம் சொல்பவர்களை அடக்கிப் போடுவதில், அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது' என்று ஒரு நீதியரசரே குறிப்பிட்டிருக்கிறார்.
காவல் துறையில், உயர்அதிகாரிகளுக்கு சாமானிய மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மிகமிக குறைவு. அந்த அரிய வாய்ப்பையும் பெரும்பாலான அதிகாரிகள் தவிர்த்து விடுகின்றனர். அடிமட்ட நிலையிலிருக்கும் காவலர்களுக்கு, வாய்ப்பு மிகமிக அதிகம். பலர் அனுமதிக்கப் படுவதில்லை; சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.
ஒரு புகாரைப் பெற்று சி.எஸ்.ஆர்., ரசீது கொடுக்கக்கூட ஆய்வாளரின் அனுமதிக்காகவும், எப்.ஐ.ஆர்., போட கண்காணிப்பாளரின் அனுமதிக்காகவும், காத்திருக்க வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம், எட்டாம் வகுப்பு படித்த ஏட்டைய்யா, புகார்களை விசாரித்து சமரசம் செய்து வைத்ததால், பிரச்னை பெரிதாகாமல் தடுக்கப்பட்டது.
இப்போது, நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களெல்லாம், ஆய்வாளருக்காக காத்திருந்து அவரை சந்திக்க முடியாமல், தாதாக்களிடமும், கூலிப்படையிடமும் போக ஆரம்பித்துவிட்டனர். தாதாக்களும், கூலிப்படையும் உருவானதற்கு இதுதான் காரணம்.
சுமுகமான தீர்வுக்கு வழிவகுக்கும் முந்தைய 'ஏட்டைய்யா விசாரிப்பு' நடவடிக்கையினால் ஒரு பகைமை அழிக்கப்பட்டு பல குற்ற சம்பங்கள் தவிர்க்கப்பட்டு வந்தன. இது கட்டப்பஞ்சாயத்து அல்ல; குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 149 (பிரிவு 168, புதிய பி.என்.எஸ்.எஸ்.,) அனுமதிக்கும் குற்ற தடுப்பு நடவடிக்கை.
அது நடக்காமல் போவதால், முன்பின் தெரியாத வக்கீலிடம் தன்னிடம் உள்ள பொய்யைக் கொடுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி, ஆண்டுக்கணக்கில் வக்கீலுக்கு கப்பம்கட்டி, வாழ்நாளில் பெரும்பகுதியை நீதிமன்ற வளாகத்தில் செலவிடுவோர் அதிகம்.
காவல்துறையில், ஒரு விசாரணை அதிகாரி, முறையாக விசாரணை செய்யாமல் விட்டால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திறமைமிக்க அதிகாரி, சம்பவ இடத்தில் விசாரணை செய்து, சாட்சிகளின் அடிப்படையில் யார் குற்றவாளி என்று அன்றே தீர்மானித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, தனது வழக்கு நாட்குறிப்பில் தீர்ப்பு எழுதி விடுகிறார்.
நீதிபதிகள், அந்த விசாரணையைத் தான் ஆய்வுசெய்து ஒத்துக் கொண்டு, தண்டனை வழங்குகின்றனர். 'விசாரணை சரியில்லை என்று' தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுவிட்டால், அந்த அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இன்றைய நிலையில், நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் பலகோடி வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்து ஒரு சமூகவியல் ஆய்வாளர், 'இவையெல்லாம் முடிவுக்கு வரும்போது இரண்டு, மூன்று தலைமுறைகளாகும். வழக்கை தொடுத்தவர் மட்டுமல்ல, முதலில் விசாரணை துவக்கிய நீதிபதிகள் கூட உயிரோடிருக்க வாய்ப்பில்லை' என்கிறார்.
பிரபல ரவுடி
வழக்குகளை விரைந்து விசாரிக்க உருவாக்கப்பட்ட லோக் அதாலத், ஓரளவு பயணளிக்கிறது. பல நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சு நடத்தி தீர்வு காண அனுமதிக்கின்றனர். அதுவும் ஒரு சிறந்த முயற்சியே!
எனினும், பத்து, இருபது கொடிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவனுக்கு, 'பிரபல ரவுடி' என்று பட்டம் சூட்டி இந்தச் சமுதாயம் பயந்து நடுங்கி, மரியாதை செலுத்திக் கொண்டிருப்பதும், காவல்துறையும், கையில் அவன் சிக்கும் வரை காத்திருந்து சுட்டுக் கொல்வதும், நாமே கதை எழுதி, இயக்கிய நாடக அரங்கேற்றங்கள்!
உளவுத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை ஆகியவற்றிலுள்ள நேர்மையும், திறமையும் கொண்ட நல்லவர்கள், சமுதாயத்தில் நிலவும் அவலங்களை கண்டறிந்து அம்பலப்படுத்தும் துணிவுமிக்க ஊடகங்கள், உண்மையான சமூகஆர்வலர்கள் ஆகியோர் சுயநலம் கருதாமல், ஒருங்கிணைந்து செயல்பட்டால், நீதிமன்றங்களில் நிரம்பிவழியும் வழக்குகள் வெகுவாகக் குறைந்துவிடும்.
அதன் காரணமாக, சமுதாயத்தில் நிலவும் பகைமைகளும் குறைந்து விடுவதால், விரோதம் காரணமாக நிகழும் தாக்குல், ஆள்கடத்தல், கொலை முதலான குற்றங்கள் குறைந்துவிடும்.
கொலைக்குற்றவாளி, பிணையில் வரும்போது, கொலை செய்யப்பட்டவருக்கு வேண்டியவர்கள் அவனைக் கொலை செய்வது, வழக்கமான நிகழ்வாகிவிட்டது. சமுதாய நலனுக்கு அது ஏற்புடையதல்ல!
மேலும்
-
புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் மோடி
-
பிளவுபடுத்தும் அரசியலை செய்யும் ராகுல்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
-
விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி
-
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் இல்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
-
உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை