மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

மதுரை: 'உங்கள் ஊர் உங்கள் கனவு' திட்டத்தின் கீழ் தி.மு.க,, தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில் மதுரை - துாத்துக்குடி இண்டஸ்ட்ரீயல் காரிடார் வரவேண்டும் என தென்மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தொழில்துறையினர் கூறியதாவது:

துாத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிப்பதற்கு பல நுாறு சிறிய யூனிட் தொழிற்சாலைகள் உருவாக்கினால் தான் பெரிய தொழிற்சாலையின் தயாரிப்பு தடையின்றி தொடரும்.

கூடுதலாக பர்னிச்சர் பூங்கா தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையும் தொடங்கப்பட உள்ளது. இதற்குத் தேவையான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கும் சிறிய யூனிட்கள் சுற்றிலும் அமைய வேண்டும். துாத்துக்குடி, விருதுநகரில் மட்டும் கனரக தொழிற்சாலைகள் செயல் படுகின்றன.

மதுரை - துாத்துக்குடி இண்டஸ்ட்ரீயல் காரிடாருக்காக தமிழக அரசு சார்பில் 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மதுரை -அருப்புக்கோட்டை வழி துாத்துக்குடி வரையான நான்குவழிச்சாலை பகுதியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது.

தண்ணீரில்லை என்றும், தொழில்துறையினர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறி திட்டத்தை பல ஆண்டுகளாக தி.மு.க., -அ.தி.மு.க., கிடப்பில் போட்டுள்ளன. மதுரையில் இருந்து ஒவ்வொரு 20 கிலோ மீட்டர் இடைவெளியில் 500 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சிட்கோ தொழிற்பேட்டைகளை அரசு உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் 300 முதல் 500 சிறு யூனிட்கள் அமைப்பதற்கேற்ப 50 சென்ட் முதல் ஒரு ஏக்கர் அளவுக்கு பிரித்து திட்டமிடலாம். மதுரை, விருதுநகரில் தலா இரண்டு யூனிட், விருதுநகரில் ஒரு யூனிட் என 5 தொழிற்பேட்டைகள் அமைத்தால் தென்மாவட்ட இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சாயல்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் யூனிட் அமைத்தால் ராட்சத குழாய்கள் வழியாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசே விலைக்கு விற்கலாம். 'உங்கள் ஊர் உங்கள் கனவு' என்ற திட்டத்தில் தென்மாவட்ட தொழில்துறையினர் கனவை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

Advertisement