வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கான 3 நாட்கள் செஸ் விளையாட்டுபயிற்சி முகாமினை செஸ் உலக கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் நேற்று துவக்கி வைத்தார்.

விஸ்வநாதன் ஆனந்தின் 'லைட்டிங் கிட்' புத்தகத்தை மதுரை வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், துணை சேர்மன் விவேகானந்தன் வெளியிட்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது:

சென்னைக்கு அடுத்து மதுரையில் செஸ் பயிற்சி முகாம் நடத்துகிறோம். தொடர் பயிற்சி, புதிய முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

செஸ்போர்டில் என்ன செய்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம் என்பதை குறுகிய நேரத்தில் புரிந்து செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும்.

நான் ஏற்கனவே விளையாடிய செஸ் போட்டி களின் காய் நகர்த்தல்கள் (மூவ்) குறித்து காண்பிப்பேன். இதன் மூலம் புதிதாக விளையாடுபவர்கள் கற்றுக் கொண்டு நம்முடன் போட்டியிடுபவரின் 'மூவ்' தெரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடலாம். சர்வதேச விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, தமிழகத்திலும் சிறந்த செஸ் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். துருக்கி, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, சீனா, அமெரிக்க வீரர்கள் சிறந்த முறையில் விளையாடுகின்றனர்.

குறிப்பாக இப்போது உள்ள வீரர்கள் விளையாட்டின் நுணுக்கத்தை நன்கு புரிந்து உள்ளனர் என்றாலும் சில வீரர்கள் அவசரப்பட்டு விளையாடுகின்றனர். நானும் அதுபோல் வேகமாக விளையாடியுள்ளேன். என்னுடைய விளையாட்டு முறை குறித்து எனது தந்தையே இதே முறையில் தொடர்ந்து செய் என கூறியுள்ளார். தமிழகத்தில் விளையாட்டு வீரர் களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பயிற்சி, விளையாட்டு எதுவாக இருந்தாலும் மனதுக்கு பிடித்த மாதிரி செயல்பட வேண்டும். மனதுக்கு பிடித்திருந்தால் தான் எந்த விஷயத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். சந்தோஷமாக செயல்பட்டால் தான் செஸ் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்றார்.

முத்துராமலிங்கம் கூறுகையில், ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இங்கில்லை. முயற்சி செய்தால் எந்த துறையிலும் சாதிக்க முடியும். இப்போது நடத்தப்படும் செஸ் போட்டியில் திறமையானவர்கள் பங்கேற்றால் வாய்ப்பளிக்க முடியும்'' என்றார்.

சர்வதேச செஸ் மாஸ்டர்கள் சரவணன், நடராஜன் பங்கேற்றனர்.

Advertisement