ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை கலைத்து விட்டால் சிறப்பு : உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி: 'பில்டர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து வரும், 'ரேரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தை கலைத்துவிடுவது சிறந்த முடிவாக இருக்கும்' என, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது .

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவில் இருந்து தரம்சாலாவுக்கு, 'ரேரா' அலுவலகத்தை மாற்ற, அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து ஹிமாச்சல பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இம்மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வீடு வாங்கும் நுகர் வோரின் குறைகளை தீர்ப் பதற்காகத் தான், 'ரேரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பு நுகர்வோருக்கு சாதகமாக இல்லாமல், பில்டர்களுக்கு மட்டுமே சாமரம் வீசி வருகிறது.

எனவே, இந்த அமைப்பை கலைப்பது

தொடர்ச்சி 17ம் பக்கம்

ரியல் எஸ்டேட்...

3ம் பக்கத் தொடர்ச்சி

குறித்து அனைத்து மாநில அரசுகளும் சிந்திக்க வேண்டும். அப்படி கலைத்தாலும் உச்ச நீதிமன்றம் கவலைப்படாது.

ஒவ்வொரு மாநிலத்திலும், 'ரேரா' செயல்படுகிறது. அந்த அமைப்பின் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், அந்த அலுவலகங்கள் வயதானவர்களின் மறுவாழ்வு மையமாக மாறி வருகிறது.

இந்த அமைப்பால் பயன்பெற வேண்டிய பொதுமக்கள், மன உளைச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் தான் ஆளாகின்றனர். யாருக்காக, 'ரேரா' இயங்குகிறது என்பது தான் தற்போது எழுந்திருக்கும் பெரிய கேள்வி.

சுற்றுச்சூழல் பாதிப்பால், சிம்லா நகரம் ஏற்கனவே மூச்சுத்திணறி வருகிறது. எனவே, மாநில அரசின் விருப்பப்படி 'ரேரா' அலுவலகத்தை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement