கரும்பில் நோய்த்தாக்குதல்: அதிகாரிகள் குழு ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
உடுமலை: கரும்பு சாகுபடியில் பரவி வரும் நோய்த்தாக்குதல் குறித்த, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வட்டார வேளாண்துறையினர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் நேரடியாக ஆய்வு செய்து, நோய்த்தடுப்பு பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
உடுமலை ஏழு குள பாசன பகுதிகளில், கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. சுண்டக்காம்பாளையம், வடபூதனம் பகுதியில் பயிரின் வளர்ச்சி தருணத்திலுள்ள கரும்பு பயிரில் பரவி வரும் நோய்த்தாக்குதலால், விவசாயிகள் கவலையடைந்தனர். கரும்பு பயிர்கள் பச்சையம் இழந்து திடீரென கருகத்துவங்கியது. வைரஸ் அல்லது புழு தாக்குதலா என்பது குறித்து தெரியாததால், நோய்த்தடுப்பு பணிகளையும் விவசாயிகள் மேற்கொள்ள முடியவில்லை.
ஆண்டு முழுவதும் பராமரிக்கும் சாகுபடியில் விளைச்சல் குறையும் நிலை ஏற்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சுண்டக்காம்பாளையம் விவசாயி வஞ்சியப்பன் தோட்டத்தில், நேற்று காலை உடுமலை வட்டார வேளாண் அலுவலர் சுனில்கவுசிக் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலர் ஜோதிவேல், அதிகாரிகள் துரைராஜ், மாணிக்கராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
விவசாயிகளுக்கு அறிவுரை ஆய்வுக்குழுவினர் கூறியதாவது: வடபூதனம், சுண்டக்கம்பாளையம் பகுதிகளில், கரும்பில் நோய்த்தாக்குதல் குறித்த 'தினமலர்' செய்தி அடிப்படையில், நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் விவசாயி வஞ்சியப்பன் விளைநிலத்தில், கரும்பு பயிர்களை துரு நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நோயை கட்டுப்படுத்த, 'மென்கோசெப்' என்ற பூஞ்சான கொல்லியை, 2 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது நனையும் கந்தகம் லிட்டருக்கு 3 கிராம் என்ற அளவில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் உள்ளிட்ட நோய்த்தடுப்பு பரிந்துரைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு, தெரிவித்தனர்.
விவசாயி வஞ்சியப்பன் தோட்டம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள விளைநிலங்களிலும் இந்த சிறப்பு குழுவினர் துரு நோய் தாக்குதல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்