வெள்ளலுார் குப்பை கிடங்கில் மத்திய குழு ஆய்வு மாநகராட்சி மீது பொதுமக்கள் சரமாரி புகார்
கோவை: கோவை நகரில் சேகரமாகும் குப்பையை மாநகராட்சி வெள்ளலுாரில் கொட்டுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்பதால், அங்கு கொட்டக் கூடாதென மக்கள் கூறுகின்றனர். பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். கிடங்கில் தீப்பற்றியது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வழக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆஜராகி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளலுார் கிடங்கில் ஏற்கனவே ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையை மனுதாரர் சமர்ப்பித்தார். இதையடுத்து, வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குனர் வரலட்சுமி, விஞ்ஞானி பூர்ணிமா உள்ளிட்டோர் நேற்று கோவை வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் விளக்கக் கூட்டம் நடந்தது. துணை கமிஷனர் குமரேசன் வரவேற்றார். திட்ட அதிகாரி சரவணன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உரம் தயாரிப்பது, மரக்கன்று நடுவது, 'பயோமைனிங்' முறையில் பழைய குப்பை அழிப்பது, குப்பையில் காஸ் தயாரிக்க எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கினர்.
அதன்பின், மத்திய குழுவினர் வெள்ளலுார் கிடங்கிற்கு சென்றனர். மனுதாரரான, குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், உடன் செல்ல நின்றிருந்தார். மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வாக்குவாதம் ஏற்பட்டது. மனுதாரர் இல்லாமல் ஆய்வு செய்வது தவறானது என சுட்டிக் காட்டியும் அனுமதிக்கவில்லை.
மத்திய அதிகாரிகள் கார், கிடங்கினுள் சென்றது. காரை நிறுத்திய போலீசார், பொதுமக்கள் காலையில் இருந்து காத்திருப்பதாக தெரிவித்தனர். திரும்பி வந்த மத்திய அதிகாரிகள், மக்களிடம் பேசினர். 'எந்த நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல் ஆய்வு செய்ய வேண்டும்' என, மனுதாரர் மோகன் வலியுறுத்தினார்.
'எங்களது ஆய்வில் யாரும் குறுக்கிட முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
'பசுமை தீர்ப்பாய தீர்ப்பை மாநகராட்சி மீறுகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டக்கூடாது. மீறி கொட்டுகின்றனர். பழைய குப்பையை பயோமைனிங் முறையில் அழிக்க வேண்டும். இன்னும் அவ்வேலையை முடிக்கவில்லை. நீங்கள் வருகிறீர்கள் என்பதற்காக, இரு நாட்கள் 1,000 தொழிலாளர்களை அனுப்பி, குப்பை கிடங்கை அழகுபடுத்தி இருக்கிறார்கள். 4 மாதங்களாக கண்டுகொள்ளாத கமிஷனர், நீங்கள் வருகிறீர்கள் என்றதும் அவசரமாக வந்து சென்றிருக்கிறார்,'' என கூறிய மோகன், 'புதிதாக குப்பை கொட்டக் கூடாது' என மத்திய வாரியம் கொடுத்த அறிக்கை நகலை காட்டினார்.
பின், மக்கள் மனு கொடுத்தனர். கிடங்கினுள் தலைமை பொறியாளர் விஜயகுமார், நிர்வாக பொறியாளர் இளங்கோவன் மாநகராட்சி பணிகளை சுட்டிக் காட்டினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் சதீஷ்குமார் உடனிருந்தார்.
மேலும்
-
'ஏட்டைய்யா விசாரிப்பு' முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்!
-
மதுரை - துாத்துக்குடி காரிடார் திட்டம் வருமா தென் மாவட்ட தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
-
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தோல்வியை கூறி காங்., பதிலடி
-
வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் செஸ் பயிற்சி முகாம் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் துவக்கி வைத்தார்
-
கன்னியாகுமரிக்கு சிவராத்திரி சிறப்பு ரயில்
-
மதுரையில் 140 அடி வ.உ.சி.,சிலை பிப்.22ல் துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டுகிறார்