ஒரு கிலோ கறிவேப்பிலை 120 ரூபாய் தொடர் பனியால் உச்சம் தொட்ட விலை

கோவை: வழக்கமாக, கிலோ, 30-40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட கறிவேப்பிலை தற்போது, 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பெரும்பாலும் துாக்கி வீசப்படும் இக்கறிவேப்பிலை உற்பத்தி குறைவால் தேவையும், விலையும் அதிகரித்துள்ளன.

பூச்சி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் விவசாய பொருட்களில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த கருவேப்பிலை. தற்போது, பூச்சி தாக்குதல் அதிகம் என்பதால், பூச்சி மருந்து பயன்பாடும் அதிகமாக உள்ளன.

இதனால், பொதுமக்கள் சுத்தமாக கழுவிய பின்னர் சமையலுக்கு பயன்படுத்த டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அல்லது பனிக்காலங்களில் சமையலில் கறிவேப்பிலை தவிர்பதும் தவறில்லை என்கின்றனர்.

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷாம் ரவேலிடம் கேட்டபோது, ''பொதுவாக டிச., மாதம் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்படும், பூச்சி தாக்குதலும் அதிகம் இருக்கும்.

இதனால், வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்படும். தற்போது, பிப்., மாதம் ஆகியும் பனிப்பொழிவு தொடர்வதால் வரத்து குறைந்துள்ளன. உழவர் சந்தையில் ஒரு கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தைகளில், 100--120 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையாகிறது. வெயில் காலம் துவங்கியதும் விலை குறைந்துவிடும்,'' என்றார்.

Advertisement