ராஜாமில் ரோடு புதுப்பிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீண்ட காலமாக குண்டும், குழியுமாக இருந்த ராஜாமில் ரோடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் ரோடு, பிரதான சாலையாக உள்ளது. இவ்வழியாக தினமும், ஆனைமலை, கோட்டூர் மற்றும் கேரளாவுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, குண்டும், குழியுமாகவும், ஆங்காங்கே பெயர்ந்தும் கிடக்கின்றன.

இவற்றை சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினர் வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ராஜாமில் ரோடு மற்றும் சுற்றுப்பகுதி ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மூலதன மானிய நிதியில், 12 சிறு பாலங்கள், 120 மீட்டருக்கு வடிகால் வசதிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, குடிநீர் குழாய் புதுப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டதால், ரோடு மிகவும் மோசமாகி புழுதி பறந்தது. அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ராஜாமில் ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து பணியை முடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.

Advertisement