உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

32

சென்னை: '' உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்'', அரசு பணிக்கு புதிதாக தேர்வாகி உள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.


2025ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட போட்டி தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.




இதன் பிறகு அவர் பேசியதாவது: அனைவருக்குமான முதல்வராக இருந்து வருகிறேன். படித்து முன்னேறி வந்த உங்களை பார்க்கும்போது உணர்ச்சி பெருக்கில் நின்று கொண்டு இருக்கிறேன். இந்த நாள் உங்கள் கனவுகள், உங்கள் பெற்றோர் கனவுகளை நிஜமாக்கிய நாள். உங்கள் குடும்பத்துக்கு பெருமை தேடி தந்த நாள். அந்த வகையில் பொன்னான நாள். டிஎன்பிஎஸ்சி, மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் பெருமை கொள்கிறேன். பணி நியமனம் ஆணை என்பது உழைப்புக்கான அங்கீகாரம் மட்டும் அல்ல. எதிர்காலத்துக்குமான உத்தரவாதம்.

தமிழகம் முன்னேறும்




இளைஞர்கள் தான் தமிழகத்தின் எதிர்காலம். நீங்கள் முன்னேறும் போதுதான், தமிழகம், இந்தியா முன்னேறும். நீங்கள் கற்றதை சமுதாயத்தில் விதைக்க போகிறீர்கள். நீங்கள் அரசின் முகமாக செயல்பட போகிறீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் அரசு சிறப்பாக செயல்படும். மக்கள் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் சிறப்பாக பணியாற்றினால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். சிறந்த தலைமுறை உருவாகும்.

நல்ல பெயர்




டாக்டர்கள் சிறப்பாக பணியாற்றும்போது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மக்களை தேடி குறைகளை தீர்த்து வைத்து உள்ளனர். 22 கோடி பட்டாக்கள் கிடைத்து உள்ளன. இதனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து உள்ளது என்றால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் காரணம். அரசியலில் இருக்கும் நாங்கள் கொள்கைகள் வகுக்கிறோம்.


திட்டம் தீட்டுகிறோம். பட்ஜெட் ஒதுக்கி நிதி ஒதுக்கிறோம். இதனை சிறப்பாக செயல்படுத்துவது அரசு ஊழியர்களின் கைகளில் இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில்

டிஎன்பிஎஸ்சி மூலம் 45,126 பேரும்,

சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 24,927 பேரும்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேரும்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 11,244

கருணை அடிப்படையில் 5,899 பேரும்

பல்வேறு அரசு துறைகளில் 54,864 பேரும்

விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் 177 பேரும் என மொத்தம் 1,55,131 பேருக்கு அரசு பணி பெற்றுள்ளனர்.

நேர்மை




அன்னிய முதலீடு மூலம் 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்து உள்ளோம்.
இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்துக்காக கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள். நேர்மையாக இருந்தால் அரசின் நேர்மை திறன் வெளிப்படும். நேரம் தவறாமல், மக்களை எளிதில் அணுகுபவர்களாக, இருந்தால் பெருமை தேடித் தரும். அரசுக்கு நேரத்தை கொடுக்கும் அதே நேரத்தில் உங்களின் உடல்நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement