ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி அபராதம்; தகுதிச்சான்று இன்றி வானில் பறந்ததால் நடவடிக்கை

6


புதுடில்லி: வானில் பறப்பதற்கான தகுதிச் சான்று இல்லாமல் 8 முறை விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


ஆண்டுதோறும் ஒவ்வொரு விமானத்திலும் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தி, 'ஏ.ஆர்.சி.,' எனப்படும் தகுதிச் சான்றிதழ், ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் வழங்கப்படுவது வழக்கம். இந்த சான்றிதழ் பெற்ற விமானங்களே வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

இந்த சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம், 'ஏ.ஆர்.சி.,' தகுதிச் சான்று இல்லாமல், டில்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு இயக்கப்பட்டது. தகுதிச் சான்று இன்றி விமானத்தை இயக்குவது பாதுகாப்பு விதிகளின்படி, கடுமையான குற்றமாகும்.

ஏர் இந்தியாவின் இந்த விதிமீறலைத் தண்டிக்கும் விதமாக, ரூ.1 கோடி அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தவறுக்கு ஏர் இந்தியா சிஇஓ காம்ப்பெல் வில்சன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறோம். கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்து, அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டில் மிக உயர்ந்த தரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்," என்று தெரிவித்தார்.

Advertisement