போடி - துாத்துக்குடி பகல் ரயில் சேவை தேவை; சும்மா நிற்கும் பெட்டிகளை கொண்டு இயக்கலாம் பயணிகள் எதிர்பார்ப்பு
மதுரை: போடி - துாத்துக்குடி இடையே மதுரை, விருதுநகர் வழியாக ரயில் இயக்க தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமைக்கப்படும் புதிய ரயில் பாதை திட்டம் மந்தகதியில் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை.
'நிலம் கையகப்படுத்திக் கொடுக்கவில்லை' என மத்திய அரசும், 'போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை' என மாநில அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி, அரசியல் செய்து வருகின்றனர். இதனால் தென்மாவட்ட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே உள்ள வழித்தடத்திலாவது கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முன்வர வேண்டும்.
ரயில்கள் குறைவு மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக துாத்துக்குடி வரை இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டு, மின்மயமாக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 7:25 மணிக்கு மதுரை வரும் மைசூரு - துாத்துக்குடி ரயிலை விட்டால் பகலில் துாத்துக்குடிக்கு ரயில்கள் கிடையாது. மறுமார்க்கத்திலும் மாலை 5:30 மணி வரை மதுரைக்கு ரயில்கள் இல்லை.
மதுரை - போடி வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டாலும் ரயில்களின் இயக்கம் குறைவு. தினமும் காலை 8:20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயிலை விட்டால் போடிக்கு ரயில்கள் கிடையாது. மறுமார்க்கத்தில் மாலை 6:00 மணி வரை மதுரைக்கு ரயில்கள் இல்லை.
தேனி மாவட்ட மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல மதுரை வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. போடி - துாத்துக்குடி இடையே ரயில் இயக்கினால் கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரே ரயிலாக... மதுரையில் இருந்து போடிக்கு தினமும் காலை 10:00 மணிக்கு செல்லும் ரயில், அங்கேயே மாலை வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனை போடியில் இருந்து காலை 10:20 மணிக்கு இயக்கி மதியம் 12:00 மணிக்கு மதுரை வந்து, மதியம் 3:00 மணிக்கு துாத்துக்குடிக்கு செல்லும் வகையில் இயக்கலாம். பின் மாலை 6:15 மணிக்கு திருநெல்வேலிக்கு இயக்கலாம்.
எதிர் வழித்தடத்தில் திருநெல்வேலி- துாத்துக்குடிக்கு காலை 9:30 மணிக்கு செல்லும் ரயில், அங்கேயே மாலை வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனை துாத்துக்குடியில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:20 மணிக்கு மதுரை வந்து மதியம் 3:00 மணிக்கு போடி செல்லும் வகையில் இயக்கலாம். பின் மாலை 6:00 மணிக்கு மதுரைக்கு இயக்கலாம்.
பலமணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் மதுரை - போடி, திருநெல்வேலி - துாத்துக்குடி ரயில்களை இணைத்து பகலில் போடி - துாத்துக்குடி - போடி இடையே ஒரே ரயிலாக இயக்கலாம். இதன்மூலம் தேனி மாவட்ட மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல ரயில் வசதி கிடைக்கும்.
மேலும்
-
சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
-
பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
-
பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
-
இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
-
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?