ஆஸ்திரேலிய அணிக்கு 'ஷாக்' * ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
கொழும்பு: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 23 ரன் வித்தியாசத்தில், ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
இலங்கையின் கொழும்புவில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் 2021ல் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
பிரையன் அபாரம்
ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னெட், மருமானி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 61 ரன் சேர்த்த போது, ஸ்டாய்னிஸ் பந்தில் மருமானி (35) அவுட்டானார். ரியான் பர்ல் 35 ரன்னில், கேமரான் கிரீன் பந்தில் வீழ்ந்தார். பிரையன், அரைசதம் அடித்தார்.
நாதன் எல்லிஸ் வீசிய கடைசி பந்தில், ஜிம்பாப்வே அணிக்காக இப்போட்டியின் ஒரே சிக்சரை அடித்தார் கேப்டன் சிக்கந்தர் ராஜா. ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 169/2 ரன் எடுத்தது. பிரையன் (64), சிக்கந்தர் ராஜா (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரென்ஷா ஆறுதல்
ஆஸ்திரேலிய அணியின் 'டாப்-ஆர்டர்' முசரபானி 'வேகத்தில்' தகர்ந்தது. இங்லிஸ் (8), கேமரான் கிரீன் (0, டிம் டேவிட் (0), கேப்டன் டிராவிஸ் ஹெட் (17) விரைவில் பெவிலியன் திரும்ப, 4.3 ஓவரில் 29/4 என திணறியது.
அடுத்து மேக்ஸ்வெல், ரென்ஷா போராடினர். 5வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது மேக்ஸ்வெல் (31) வீழ்ந்தார். ஸ்டாய்னிஸ் (6), டிவார்ஷியஸ் (6), ஜாம்பா (2) அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் 106/4 என இருந்த ஆஸ்திரேலியா, அடுத்து 40 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 19.3 ஓவரில் 146 ரன்னில் சுருண்டு, தோல்வியடைந்தது.
ஜிம்பாப்வே சார்பில் ஆட்டநாயகன் முசரபானி, 4 விக்கெட் சாய்த்தார்.
இரண்டாவது முறை
'டி-20' உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதிய இரண்டு போட்டியிலும், ஜிம்பாப்வே (2007, 2026) வெற்றி பெற்றது.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 'டி-20' உலக அரங்கில், 100 சதவீத வெற்றியை பதிவு செய்த ஒரே அணி ஜிம்பாப்வே.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் அரங்கில் ஜிம்பாப்வே பெற்ற 5வது (3 ஒருநாள், 2 'டி-20') வெற்றி இது.
4 விக்கெட்
'டி-20' உலக கோப்பை, ஐ.சி.சி., அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிரான 'டி-20' அரங்கில் ஜிம்பாப்வே அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் முசரபானி (4 விக்.,/17 ரன்). முன்னதாக ஜாங்வே (4/18, எதிர்-பாக்., 2021) இருந்தார்.
* தவிர, சர்வதேச 'டி-20'ல் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய 3வது ஜிம்பாப்வே பவுலர் முசரபானி (85 போட்டி, 100 விக்.,). முதல் இரு இடத்தில் ரிச்சர்டு நிகரவா (111), சிக்கந்தர் ராஜா (103) உள்ளனர்.
'சூப்பர்-8' எப்படி
'பி' பிரிவில் தலா 2 போட்டி முடிந்துள்ளன. முதல் இரு இடத்தில் உள்ள இலங்கை (4 புள்ளி), ஜிம்பாப்வே (4) அணிகளின் 'சூப்பர்-8' வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா (2), அயர்லாந்து (0), ஓமன் (0) அணிகள் 3, 4, 5வதாக உள்ளன. நேற்று ஆஸ்திரேலிய அணி தோற்றதால், அடுத்து இலங்கை (பிப். 16), ஓமன் (பிப். 20) அணிகளை கட்டாயம் வெல்ல வேண்டும். பின் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
நம்ப முடியவில்லை
கடந்த 2024 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை. இம்முறை கேப்டன் சிக்கந்தர் ராஜா கூறுகையில், ''போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதை, நம்ப முடியவில்லை. இதைத் தான் நாங்கள் விரும்பினோம். இதற்கான தகுதி எங்களுக்கு உள்ளது,'' என்றார்.
மிரட்டும் மழை
கொழும்புவில் நாளை மதியம் இடியுடன் கூடிய மழை பெய்ய 50 முதல் 70 சதவீத வாய்ப்புள்ளது. இது மாலையில் தொடரும் பட்சத்தில் இந்தியா-பாக்., போட்டியில் பாதிப்பு ஏற்படுத்தலாம். மழை நீர் வடிகால் வசதி சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால், 40 முதல் 60 நிமிடத்தில் போட்டியை துவங்கி விடலாம்.
ரோகித் எச்சரிக்கை
இந்தியாவுக்கு 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்று தந்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''பாகிஸ்தானுக்கு எதிராக 2 புள்ளி எளிதாக கிடைத்து விடும் என்று நினைத்து, மைதானத்தில் களமிறங்க கூடாது. குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த புள்ளிகள் நமக்கு கிடைக்கும்,'' என்றார்.
ஸ்டாய்னிஸ் காயம்
ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் (முதுகு வலி), ஹேசல்வுட் (தொடை பின்பகுதி) என முன்னணி பவுலர்கள் காயத்தால் விலகியதால், பவுலிங் ஏற்கனவே பலவீனமாக உள்ளது. நேற்று சீனியர் 'ஆல் ரவுண்டர்' ஸ்டாய்னிஸ் 36, பந்து வீசிய போது (15.5வது ஓவர்), பர்ல் அடித்தார். இதை தடுக்க முயற்சித்த ஸ்டாய்னிஸ், இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர், மைதானத்தை விட்டு வெளியேறினார். பின் பேட்டிங் செய்ய வந்த இவர், 6 ரன்னில் அவுட்டானார்.
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...