உலக விளையாட்டு செய்திகள்

இந்திய வீரர் 104வது இடம்
மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 'கிராஸ்-கன்ட்ரி' பனிச்சறுக்கு, 10 கி.மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ஸ்டான்சின் லண்டப் உட்பட 113 பேர் பங்கேற்றனர். இலக்கை 28 நிமிடம், 26.7 வினாடியில் கடந்த ஸ்டான்சின், 104வது இடம் பிடித்தார். நார்வேயின் ஜோஹன்னஸ் ஹோஸ்பிளோட் க்ளோபோ (20 நிமிடம், 36.2 வினாடி) தங்கம் வென்றார்.


ஆர்சனல் அணி 'டிரா'
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 34வது சீசன் நடக்கிறது. ஆர்சனல், பிரென்ட்போர்டு அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 26 போட்டியில், 17 வெற்றி, 6 'டிரா', 3 தோல்வி என, 57 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி (53 புள்ளி) உள்ளது.


ஸ்வியாடெக் தோல்வி
தோகா: கத்தார் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீசின் மரியா சக்காரி மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்வியாடெக் 6-2, 4-6, 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 5-7, 6-4, 4-6 என, கனடாவின் விக்டோரியா எம்போகோவிடம் வீழ்ந்தார்.



எக்ஸ்டிராஸ்

* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, 3 'டி-20', 3 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வடக்கு சிட்னியில் நடந்த 'டி-20' பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி (121/5) 5 விக்கெட் வித்தியாசத்தில் கவர்னர்-ஜெனரல் 'லெவன்' அணியை (120/8) வீழ்த்தியது. இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (36), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (26), தீப்தி சர்மா (23*) கைகொடுத்தனர்.

* தாய்லாந்தில், பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பாங்காக்கில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி (130/9), 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் (131/3) தோல்வியடைந்தது.


* புனேயில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அன்கிதா ரெய்னா ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் போலினா பக்முட்கினா, ரஷ்யாவின் மரியா கோலோவினா ஜோடியை வீழ்த்தியது.


* சென்னை ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், நிதின் குமார் சின்ஹா ஜோடி 4-6, 1-6 என இந்தியாவின் நிக்கி பூனாச்சா, தாய்லாந்தின் புருச்யா இசாரோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.


* பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் 24, நியமனம்.

Advertisement