இந்திய அணியில் குல்தீப் யாதவ்: கணிக்கிறார் கவாஸ்கர்

புதுடில்லி: ''இந்திய பவுலிங் கூட்டணியில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் இடம் பெறலாம்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பிப்.15 நடக்கும் 'டி-20' உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. கடந்த இரு போட்டியில் அமெரிக்கா, நமீபியாவை வென்ற இந்திய அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.


இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: நமீபியாவுக்கு எதிராக முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இது, பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற மாட்டார் என்பதை உணர்த்தியது. 3 ஓவர் மட்டும் வீசிய இவர், ரன்னை வாரி வழங்கினார். இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எடுபடும். இங்கு இந்திய அணி 3 'ஸ்பின்னர்'களுடன் களமிறங்கிய வரலாறு உண்டு. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக 'சுழல் மாயாவி' குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம். நமீபியாவை திணறடித்த வருண் சக்ரவர்த்தி 2 ஓவர் (3 விக்.,) தான் வீசினார். ஒருவேளை 4 ஓவர் வீசியிருந்தால், 5 அல்லது 6 விக்கெட் சாய்த்து இருப்பார். மற்றொரு 'ஸ்பின்னரான' அக்சர் படேல் 3 ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.


சாம்சன் கவனம்
அபிஷேக் சர்மா முழுமையாக குணமடையாத பட்சத்தில், மீண்டும் துவக்க பேட்டராக சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டியிருக்கும். நமீபியாவுக்கு எதிராக 8 பந்தில் 22 ரன் எடுத்தார். ஆனால், இவர் அவுட்டான விதம் இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலை அளிக்கும். இவரது ஆட்ட நுணுக்கத்தில் பிரச்னை உள்ளது. 'கிரீசிற்குள்' முழுமையாக நின்று 'பிளிக் ஷாட்' அடிக்க முயற்சிக்கிறார். அப்போது சரியான திசையில் அடித்தால் சிக்சர் ஆக மாறும். கொஞ்சம் தடுமாறினாலும், விக்கெட்டை இழக்க நேரிடும். புதிய பந்தை சந்திக்கும் இவரது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தால், களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.


அபிஷேக் எப்படி
இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா தேறி வருகிறார். அஜீரணம், வயிறு பிரச்னையால் அவதிப்பட்ட இவர், டில்லி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அரிசி, பருப்பு வகை உணவை மட்டுமே எடுத்துக் கொண்டதால், உடல் எடை 2 கிலோ குறைந்துவிட்டார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி வருண் சக்ரவர்த்தி கூறுகையில்,''அபிஷேக்கிடம் பேசினேன். நலமாக உள்ளார். சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கலாம்,''என்றார்.


அஷ்வின் 'ஐடியா'
பாகிஸ்தான் 'ஆப்-ஸ்பின்னர்' உஸ்மான் தாரிக், சிறிது நேரம் 'நிறுத்தி' வித்தியாசமாக பந்துவீசுவார். இதனால், பேட்டர்கள் தடுமாறுவர். ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் அதிகமாக முழங்கையை வளைத்து வீசுவதாக பல முறை சர்ச்சையில் சிக்கினார். இந்திய அணிக்கும் தொல்லை கொடுக்கலாம். இவரை சமாளிப்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''பந்துவீசும் முன் தாரிக் நிறுத்தினால், பதிலுக்கு பேட்டர்கள் 'கிரீசை' விட்டு விலகிச் செல்லலாம். 'அவர் பந்துவீசுவதை நிறுத்துவாக நினைத்தோம்' என காரணம் கூறலாம். இது அம்பயர்களுக்கு தலைவலியை கொடுக்கும்,''என்றார்.

Advertisement