விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை: உறுப்பு தானத்தால் 5 பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு

1

கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் அன்ஜான்.

இத்தம்பதிக்கு, அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது.

கடந்த 5ல், கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

போக்குவரத்து போலீசார் உதவியுடன் சாலை மார்க்கமாக உறுப்புகள் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டன.

குழந்தையின் இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனைக்கும், கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன. கண்கள் கண் வங்கிக்கு தானமாக தரப்பட்டன.

மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார்.

Advertisement