ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

4


மியூனிக்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடந்து வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில், 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்' என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

மியூனிக் பாதுகாப்பு மாநாடு என்பது ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முக்கிய நிகழ்வு. இதன் 62வது மாநாடு கடந்த 13ம் தேதி துவங்கி, இன்றுடன் நிறைவடைகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உலக பாதுகாப்பு சூழல், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பிராந்திய மோதல்கள், இந்தோ- - பசிபிக் பாதுகாப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.



இந்தியா சார்பில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். விவாதம் ஒன்றில் பேசுகையில், “உலகம் இப்போது பல துருவங்கள் நிலைக்கு மாறிவிட்டது. பல நாடுகள் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலைக்கு மாறி வருகின்றன. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கை நெகிழ்வாகவும், வேகமாக மாற்றிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தகம், இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்றவை இதற்கு மிக முக்கியம்.


“எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை என்றும் உறுதியான அடித்தளமாக இருக்கும். எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் யாருடைய அழுத்தத்துக்கும் இந்தியா பணியாது. விலையின் அடிப்படையிலேயே இருப்பு அளவை பொறுத்து, கச்சா எண்ணெய் கொள்முதல் முடிவு செய்யப்படும்,” என்றார். முன்னதாக ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பொருத்தமான சீர்திருத்தம் அவசியம் என வலியுறுத்தினார்.


இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு: ஐக்கிய நாடுகள் சபை 80-வது ஆண்டு நிறைவை ஒட்டி தொடங்கப்பட்ட 'யு.என்., 80' சீர்திருத்த திட்டத்துக்கு, குறிப்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தத்திற்கு, இந்தியா சார்பில் மீண்டும் ஆதரவு தெரிவித்தேன். இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement