என்னை மாதிரி நன்கு படிக்க வேண்டும் என்கின்றனர்!

கடுமையாக படித்து, அரசு பணியில் சேர்ந்துள்ள, திருச்சி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா: என் அப்பா விவசாயி. குடும்ப கஷ்டத்திற்காக சொந்த நிலத்தை விற்று, தினக்கூலியாக திருச்சி, துறையூரில் குடியேறினோம்.

வசதி இல்லாததால் அக்காவை பள்ளி படிப்புடன் நிறுத்தி விட்டு, திருமணம் செய்து வைத்தனர். அதே மாதிரி எனக்கும் திருமணம் செய்ய பெற்றோர் நினைத்தனர்.

ஆனால், எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வீட்டில் பேசி புரிய வைத்தேன். இளங்கலை வணிகவியல் படிக்கும் போது, 'இன்டர்நெட்' எனும் இணைய மையம் ஒன்றில் பகுதி நேர வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

மாத சம்பளம், 2,500 ரூபாய். அந்த பணம், என் படிப்புக்கும் வீட்டுச் செலவுக்கும் உதவியாக இருந்தது. அதன்பின், அதே இணைய மையத்தில் முழு நேர வேலையில் சேர்ந்து விட்டேன். வேலை பார்த்தபடி, தகவல் தொழில்நுட்ப படிப்பை முடித்தேன்.

அரசு வேலைக்கு சென்றால், வீட்டு நிலைமை சரியாகி விடும் என தோன்றியது. அதனால், வேலை நேரம் போக, மற்ற நேரத்தில் போட்டித் தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தபடி, தமிழ், ஆங்கிலம் தட்டச்சு கற்றுக் கொண்டேன்.

ஆனாலும், எழுதிய எல்லா பரீட்சையிலும் தோல்வி. அப்ப தான், வேலையை விடும் முடிவை எடுத்தேன். அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து படிக்க ஆரம்பித்தால், இரவு துாங்கும் வரை படித்தபடியே இருந்தேன்.

என் வீட்டு முகவரியை யாராவது கேட்டு வந்தால், 'ஒரு பொண்ணு வீட்டுக்கு வெளியே அமர்ந்து படித்துக் கொண்டு இருக்கும் பாரு... அந்த வீடு தான்' என்று கிண்டலாக அடையாளம் சொல்லும் அளவுக்கு, எங்கள் கிராமத்தில் பேசினர்.

வயதும் அதிகரிக்கவே, 'இன்னும் என்ன படிப்பு... திருமணம் செய்து வையுங்கள்' என்று உறவினர்கள் பேசினர். ஆனால், நான் வேலைக்கு சென்ற பிறகே, திருமணம் என்பதில் உறுதியாக இருந்தேன்.

என் முயற்சிக்கு பலனாக, 2017ல், திருச்சி நீதிமன்றத்தில் தட்டச்சர் வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளத்தில், வீட்டில் உள்ள எல்லாருக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அதை வாங்கி கொடுத்தேன். என் வேலையால் குடும்பச் சூழலே மாறிவிட்டது. என் திருமண செலவுகளை நானே பார்த்துக் கொண்டேன்.

தற்போது பதவி உயர்வு பெற்று, முசிறி சார்பு நீதிமன்றத்தில் உதவியாளராக இருக்கிறேன்.

என்னை கிண்டல் செய்தோர் எல்லாம், இப்போது என்னையும், என் படிப்பையும் உதாரணமாக காட்டி, 'அவளை மாதிரி நன்கு படிக்க வேண்டும்' என்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கூறுகின்றனர். படிப்பு எல்லாருடைய வாழ்க்கையையும் மாற்றினால், அனைவருக்கும் சந்தோஷம் தானே!

Advertisement