போக்குவரத்திற்கு லாயக்கற்ற பஜார் சாலை மடிப்பாக்கத்தில் மீண்டும் உயிர்பலி ஆபத்து
மடிப்பாக்கம்: அதிக போக்குவரத்து கொண்ட மடிப்பாக்கம் பஜார் சாலை, ஆங்காங்கே குண்டும் குழியுமாக பராமரிப்பின்றி உள்ளது. மீண்டும் உயிர்பலி நிகழும் முன் அச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேளச்சேரி - தாம்பரம் சாலையில் இருந்து, மவுன்ட்- - மேடவாக்கம் பிரதான சாலைக்கு செல்ல, பிரதான வழித்தடமாக பஜார் சாலை அமைந்துள்ளது. இது, மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் சபரி சாலை வழியாக செல்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இச்சாலை மையத்தடுப்பு வசதியுடன் கூடிய நான்கு வழிப்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கைவேலி கூட்டு சாலையில் இருந்து பாலய்யா கார்டன் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதிலும் சில இடங்களில் மையத்தடுப்பு அமைக்காமல், சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், இச்சாலை வழியாக செல்லும் பாதாள சாக்கடை, மூடிகள் அரை ஆழத்திற்கு உள்வாங்கியுள்ளன.
கடந்த ஆண்டு, மின்வாரிய அதிகாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பாதாள சாக்கடை மூடி பள்ளத்தில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
ஆனாலும், இதுவரை சாலையில் உள்ள மூடிகளின் பகுதி சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில், மழைநீர் வடிகால்வாய் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலையும், முழுமையாக சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.
மீண்டும் உயிர்பலி நிகழ்வதற்குள், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி
-
மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்