'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை

திருப்பூர்: சாலைகள் அடிக்கடி தோண்டப்படுவதால் 'பள்ளமில்லா சாலை' திட்டத்தினால் முழுமையான பலன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மாநில நெடுஞ்சாலைகள் தொடர்பாக பெறப்படும் புகார் மீது, 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில், 'நம்ம சாலை' என்ற பிரத்யேக செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் வீதி, தெரு, கிராமம், நகரம் மற்றும் மாவட்ட அளவில், பழுதாகியுள்ள, குண்டும் குழியுமாக, பள்ளங்கள் நிறைந்த சாலைகளை புகைப்படத்துடன் செயலியில் பதிவேற்றம் செய்யும் போது, இப்புகார் மீது, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அரசின் உத்தரவு.

'பள்ளமில்லா சாலைகள் இருக்க வேண்டும்' என்ற அரசின் அறிவுறுத்தல் படி, மாநிலம் முழுக்க சாலை பராமரிப்புப் பணிகளை கண்காணிக்க, 4, 5 மாவட்டங்களை உள்ளடக்கி, கோட்ட அளவில் தலைமை பொறியாளர் அந்தஸ்திலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நெடுஞ்சாலை முழுக்க பயணித்து, எங்கெங்கு பள்ளம், குழி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, அந்தந்த மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடுகின்றனர். அதன்படி, பள்ளம், குழிகள் நிறைந்த சாலைகள், நெடுஞ்சாலைத்துறையினரால் 'பேட்ச் ஒர்க்' செய்யப் படுகிறது.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:நெடுஞ்சாலை பராமரிப்பு பொறுத்தவரை, துறையின் சார்பில் அதிகளவு நிதி ஒதுக்கப்படுகிறது.

அதே நேரம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சாலையோரம் தான் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, மக்களுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.

அவ்வாறு பதிக்கப்பட்ட குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, நீர் கசிகிறது; அதை சரி செய்ய, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் சாலையை தோண்டுகின்றனர்; தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாததால், அந்த இடம், பள்ளம், குழியாக மாறிவிடுகிறது. அதே இடத்தை புதுப்பித்தாலும், பழைய நிலையில் முழு தரத்துடன் இருப்பதில்லை.

பல மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், சாலை அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள், பழமை வாய்ந்தவை. இதனால் தான் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குழாய்களை பதிக்க வேண்டும். அப்போது தான், 'பள்ளமில்லா சாலைகள்' என்ற அரசின் திட்டம் முழு பலன் தரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement