ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி
விருத்தாசலம்: ரயிலில் அடிபட்டு இறந்த பெண் குறித்து, ரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் - சேலம் செல்லும் ரயில் பாதையில் , விருத்தாசலம் அடுத்த மு.பட்டி அருகே 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு விருத்தாசலம் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, ரயில்வே இருப்பு பாதை சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில்,இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் பூ போட்ட வெள்ளிநிற சுடிதார், சந்தன கலர் ஷால் அணிந்திருந்தார். சடலத்தை கைப்பற்றிய இருப்புபாதை போலீசார், விருத்தாசலம் அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு ச டலத்தை அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து, வழக்குப் பதிந்து, அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.