மேல்நிலை, இடைநிலை பொதுத்தேர்வு கலெக்டர் தலைமையில் குழு அமைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில், மேல்நிலை பொதுத்தேர்வுக்கு, 153 மையங்கள், இடைநிலை பொதுத்தேர்வுக்கு, 188 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலை, 2ம் ஆண்டு பொதுத்தேர்வை, 36,713 பேர், தனித்தேர்வர், 829 பேர்; மேல்நிலை முதலாண்டு பொதுத்தேர்வை, 978 பேர், 600 தனித்தேர்வர்; இடைநிலை பொதுத்தேர்வை, 40,787 பேர் எழுதுகின்றனர்.
இத்தேர்வுகளுக்கு, 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, இரட்டைப்பூட்டு முறையில் இரு காப்பாளர் வீதம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு நாளில், அதன் மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அந்நியர் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனை பற்றிய விபரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வை செம்மையாக நடத்த, கலெக்டர் தலைமையில், மாநகர் போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்.பி., சுகாதாரத்துறை துணை இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மின்வட்ட மேற்பார்வை பொறியாளர், அரசு போக்குவரத்து பொது மேலாளர், தீயணைப்பு அலுவலர் என, 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு முறைகேடு, காப்பி அடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, கலெக்டர் தலைமையில், ஆர்.டி.ஓ.,க்கள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில், தனித்தனியே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.