ஒரு லட்சம் பேர் வசித்தால் மட்டும் பாதாள சாக்கடை வசதி கிடைக்கும்: அமைச்சர் நேரு திட்டவட்டம்
சென்னை: ''ஒரு லட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில், கசவு கழிவு மேலாண்மை திட்டத்தை மட்டுமே செயல்படுத்த முடியும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - தங்கபாண்டியன்: ராஜபாளையம் தொகுதி, சேத்துார் பேரூராட்சியில் தற்போது, 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பாதாள சாக்கடை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் நகரப் பகுதிகளில் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மற்ற பகுதிகளில் கசவு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
வி.சி.க., - எஸ்.எஸ்.பாலாஜி: ஒரு லட்சம் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே, பாதாள சாக்கடை என்ற கணக்கு கூடாது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே, அங்கு தொலைநோக்கு பார்வையுடன், பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே, பாதாள சாக்கடை அமைக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருச்செந்துார், மதுரை உள்ளிட்ட கோவில் நகரங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அதை கவனத்தில் கொண்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.