ஏற்றுமதியை ஊக்குவிக்க 7 புதிய நடவடிக்கைகள்

புதுடில்லி: நாடு முழுதும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு ஏழு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த வழிகள், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 அம்சங்களாக அறிவிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூன்று அம்சங்கள், ஜனவரி மாதத்திலேயே செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசு அறிவித்துள்ள முக்கிய ஏழு நடவடிக்கைகள்



1 நேரடி இ- - காமர்ஸ் கடன் வசதி

இ- - காமர்ஸ் ஏற்றுமதியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். இதில் 90 சதவீதம் வரை உத்தரவாதம் வழங்கப்படும்.

2 வெளிநாட்டு கையிருப்பு கடன் வசதி

வெளிநாடுகளில் சரக்குகளை சேமித்து வைப்பதற்காக, 5 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். இதில், 75 சதவீதம் உத்தரவாதம், 2.75 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்.

3 ஏற்றுமதி பாக்டரிங் வட்டி சலுகை

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மலிவான பணி மூலதனத்தை உறுதி செய்ய, பாக்டரிங் செலவில் 2.75 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். இதன் ஆண்டு வரம்பு 50 லட்சம் ரூபாய்.

4 அதிக ஆபத்து, புதிய சந்தைக்கான வர்த்தக நிதி ஆதரவு

கடன் உறுதி கடிதம் (எல்.ஓ.சி.,) மற்றும் பேச்சு போன்ற கடன் மேம்பாட்டு கருவிகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.

5 டிரேஸ் திட்டம்

சர்வதேச பரிசோதனை, சான்றிதழ் மற்றும் இணக்கம் தொடர்பான செலவுகளில் 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை (ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வரம்பில்) திருப்பி செலுத்தப்படும்.

6 புளோ திட்டம்

வெளிநாட்டு மையங்கள், இ- - காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் மற்றும் உலகளாவிய வினியோக அமைப்புகளை அணுகுவதற்கான திட்ட செலவில், 30 சதவீதம் வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.

7 லிப்ட் மற்றும் இன்சைட் திட்டங்கள்

தொலைதுார மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, 30 சதவீதம் வரை சரக்கு கட்டண உதவி வழங்கப்படும். வர்த்தக தகவல் மற்றும் வசதி திட்டங்களுக்கு 50 சதவீதம் வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.


'இந்தியா உலக

ஏற்றுமதி மையமாகும்'



ஏற்றுமதி மேம்பாட்டு இயக்க அறிவிப்புகள், ஏற்றுமதியை மேம்படுத்தி, இந்தியாவை, உலகளாவிய போட்டித்திறன் மிகுந்த ஏற்றுமதி மையமாக உயர்த்தும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறியுள்ளது.

கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:

வர்த்தக சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், 'இ-காமர்ஸ்' ஏற்றுமதிக்கு கடன் உதவி, ஏற்றுமதிக்கான வசதியை எளிதாக்குதல், வட்டி மானியம் மற்றும் கடன் உத்தரவாதம் வழங்குதல் போன்ற அம்சங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் நிதி மற்றும் உற்பத்தி செயல்பாட்டு சவால்களை குறைக்கும்.

இந்திய நிறுவனங்களின் உலகளாவிய வர்த்தக சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். 'ஏ.ஐ.,' மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இயக்கிகளாக அங்கீகரித்துள்ளனர்.

Advertisement