விவசாயிகள் கூட்டம்
திருக்கோவிலுார்: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு கூட்டம் திருக்கோவிலுாரில் இரண்டு நாட்கள் நடந்தது. மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளர் சரவணன் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி வேலை அறிக்கை வாசித்தார். அகில இந்திய தலைவர் ராஜன் கிருஸிசாகர் சிறப்புரையாற்றினார்.
மக்காச்சோளத்தை அரசு நிர்ணய விலையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட முதல்வர் தலையிட வேண்டும். பெண்ணையாறு நீர் பங்கிட்டு தீர்ப்பாயம் அமைத்திட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் கீதநாதன், மாநிலத் துணைத் தலைவர்கள் உலகநாதன், இலகுமய்யா, துளசி மணி, இந்திய கம்யூ., கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.