முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து ஈமச்சடங்கு நிதியுதவியாக 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், தொகுப்பு நிதியிலிருந்து வங்கி கடன் வட்டி மானியம் ஒருவருக்கு ரூ. 21,134 நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருவதால், குறைதீர் முகாம்களை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ஆயிஷாபேகம், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement