கிராமப்புற டவுன் பஸ்கள் டிரிப் கட் செய்யாமல் இயங்குவதை...கண்காணியுங்க:அரசு பொதுத்தேர்வு துவங்கும் நிலையில் மாணவர்கள் எதிர்பார்ப்பு

2

ஸ்ரீவில்லிபுத்துார்:மார்ச் 2 முதல் அரசு பொதுத் தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில் கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் டிரிப்புகள் கட் செய்யாமல் இயங்குவதை போக்குவரத்து கழகத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட சேய்கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் அதிக அளவில் படித்து வருகின்றனர். இதற்காக தங்கள் கிராமங்களில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருகின்றனர். இவர்களுக்காக பெரும்பாலான வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்களும், ஒரு சில இடங்களில் தனியார் பஸ்களும், மினி பஸ்களும் உதவிகரமாக உள்ளது.

இதில் தனியார் பஸ்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் இயங்கும் நிலையில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் கிராமங்களுக்கு சரியான நேரங்களுக்கு வந்து செல்வதில்லை. முன்கூட்டியே வருவது அல்லது காலதாமதமாக வருவது என்ற நிலை இருப்பதால் மாணவர்கள் சரிவர சாப்பிடாமல் கிராமங்களில் அரசு டவுன் பஸ்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதேபோல் மாலை 4:00 மணிக்கு பள்ளி முடிந்து திரும்புவதற்கு வசதியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இயங்கும் பஸ்களும் சில நாட்களில் முன்கூட்டியும், சில நாட்களில் தாமதமாகவும் சென்று விடுகின்றன. இதனால் மாணவர்கள் பசியுடன் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர்.

இதில் தினமும் காலை, மாலை என 2 நேரம் மட்டுமே பல குக்கிரமங்களுக்கு இயங்கும் டவுன் பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பின்றி டிரிப்புகள் கட் செய்யப்பட்டு, வருவாய் தரக்கூடிய வழித்தடத்தில் இயக்கப்படும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்களில் இத்தகைய கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் சரியான நேரப்படி இயங்குவதில்லை. இதனால் மாணவர்கள் தினமும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 2 முதல் 26 வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மார்ச் 3 முதல் 27 வரை 11ஆம் வகுப்பு தேர்வும், மார்ச் 11 முதல் ஏப்.6 வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்கவுள்ளது. இதில் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள் நகர்பகுதியில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுத உள்ளனர்.

இதனால் மார்ச் 2 முதல் ஏப்ரல் 7 வரை கிராமப்புற டவுன் பஸ்கள் டிரிப்புகள் கட் செய்யாமல் சீரான முறையில் இயங்குவதை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தாமதமாகும் பஸ்களால் தேர்வு எழுத முடியாத நிலை உருவாகி விடக்கூடாது என மாணவர்கள் அச்சப்படும் நிலையை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கிராமப்புற மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க் கின்றனர்.

Advertisement