குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பது தவறில்லை: அண்ணாமலை

22


கோவை: ''ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது, என்பது தவறானதாக தெரியவில்லை; தி.மு.க., ஆட்சியில் மக்கள் அதிக துன்பப்பட்டுள்ளனர்,'' என கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.



கோவை நேரு நகரில் சக்தி கேந்திரா சார்பில் நடந்த தெருமுனை பொதுக்கூட்டத்தில் பேசிய பின் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இதுவரை பா.ஜ., 10 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரசார கூட்டத்தை நடத்தியுள்ளது. 20,000 இடத்தை தொட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளோம்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்களிடையே இணக்கம் இருக்க வேண்டும். பொதுமக்களிடையே தி.மு.க., அரசின் குறைகளை சொல்ல ஒரு வாய்ப்பாகவும் பயன்படும்.


நல்ல கண்ணுவிற்கு வயது 101. அரசியல் இலக்கணத்தோடு வாழ்ந்த தலைவர். எம்.பி., --- எம்.எல்.ஏ., வாக, அரசு பதவிகளில் இருந்ததில்லை. மக்களின் குரலாக தொடர்ந்து பேசியவர். மக்களின் அன்பை மட்டும் பெற்று ஒரு மகத்தான அரசியல் இலக்கணமாக இருந்தவர். அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி. அவர் வாழ்ந்த விதம் எங்களைப் போன்ற அரசியல் வாழ்க்கையில் உள்ளோருக்கு ஊக்கத்தை கொடுக்கும்.


தே.ஜ., கூட்டணியில் நேர்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். என்ன, எது எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வர். மக்கள் நிலையான ஆட்சி தருபவர்களை மட்டுமே பார்க்கின்றனர். ஓ.பி.எஸ்.சை பொறுத்தவரை, அம்மா ஆட்சி வரவேண் டும் என்று தான் முடிவு செய்வார்.


தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை தொட்டால் ஷாக் அடிக்கிறது, சொத்துவரி கட்ட முடியவில்லை. தண்ணீர் வரியையும் உயர்த்தியுள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது தவறானதாக தெரியவில்லை; மக்களுக்கு பயன்படும். ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிக துன்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பெண்கள் இதற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பர்.


தி.மு.க., அரசு நடப்பு நிதி ஆண்டில் மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்க வேண்டும். இதிலும் 3,000 கோடி பற்றாக்குறை. சட்டத்துக்கு புறம்பாக கனிம வளம் சுரண்டப்படுகிறது. ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. ஒரே நாளில் கடனை குறைக்க முடியாது. அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கடன் சுமையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement