மனிதர்களில் புனிதர்கள்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவன கிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன் மறைந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, தன் உடல் பொது வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆராய்ச்சிக்கென, சில ஆண்டுகளுக்கு முன் எழுதிக் கொடுத்து விட்டார்.

அன்னதானம், கல்வி தானம், பொருள் மற்றும் வஸ்திர தானம் என்று உலகில் பலவகை தானங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த உடல் உறுப்பு தானம்!

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவு!

கடந்த 2008 செப்., 23ல் வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும், 15 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் தானமாக வழங்கி, நாட்டிற்கே முன்னு தாரணமாக திகழ்ந்தனர்.

ஹிதேந்திரன் உடல் உறுப்புகள் வாயிலாக எட்டுக்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்தனர்.

இந்நிகழ்வு நாடு முழுதும் மிகப் பெரிய விழிப்புணர்வுவை உண்டு செய்தது என்றே கூறலாம்!

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, சிறுவனின் தாயான டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கி பெருமைப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, 2023ல் ஹிதேந்திரன் இறந்த தினமான செப்., 23ஐ உடல் உறுப்புகள் தான தினமாக அனுசரிக்க அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு.

மேலும், உடல் உறுப்புகளை தானமாக வழங்குவோரின் இறுதிச்சடங்கு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது.

இப்படி அரசு மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையின் வாயிலாக, இன்று நாட்டிலேயே உடல் உறுப்பு தானம் செய்வதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில், அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத குழந்தை, சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தது. அக்குழந்தையின் உடல் உறுப்புகளை, அதன் பெற்றோர் தானமாக வழங்கியதில், ஐந்து குழந்தைகள் மறு வாழ்வு பெற்றுள்ளனர்.

இது, கேரளா முழுதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டது.

அக்குழந்தையின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது, கேரள அரசு. இறுதி சடங்கில் பல ஆயிரம் மக்கள் பங்கேற்று மரியாதை செய்துள்ளனர்.

நம் பிரதமர் மோடி தன், 'மன்கீ பாத்' நிகழ்ச்சியில், குழந்தையின் பெற்றோரை பாராட்டி உள்ளார்.

'பிறப்பன அனைத்தும் இறப்பன' என்ற விதியை உடைத்து, உடல் உறுப்பு தானத்தால் இறந்த பின்பும் வாழும் ஹிதேந்திரன், அலின் ெஷரின், நல்லகண்ணு போன்றவர்கள் மனிதர்களில் புனிதர்களாக என்றும் போற்றப்படுவர்!

lll



மக்கள் போடும் கணக்கை யார் அறிவர்? எல்.எம்.ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்று அரசியல், ஊழல் ஒழிப்பு' என மேடைதோறும் முழங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த், 2006-ல் நடந்த சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றதுடன், 234 தொகுதிகளில் தன் கட்சியை களம் இறக்கி, 8 சதவீத ஓட்டுகளை வாங்கி, திராவிட கட்சிகளை கதி கலங்க வைத்தார்.

விளைவு... 2007ல் மேம்பாலம் கட்டுமான பணி என்ற பெயரில், விஜயகாந்தின் கல்யாண மண்டத்தை இடித்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த து தி.மு.க., அரசு.

ஆனாலும், 2011- சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட 40 இடங்களில், 29 இடங்களை வென்று, தி.மு.க.,வை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, எதிர்க்கட்சித் தலைவரானார், விஜயகாந்த்.

அது, தே.மு.தி.க.,வின் பொற்காலம் என்றே கூறலாம். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு எதிராக விஜயகாந்த் காட்டிய ஆக்ரோஷம், அவர் அரசியல் பாதையில் தேக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

அதன்பின், 2016- சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எப்படியும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்து விட வேண்டும் என்று எண்ணி, 'பழம் நழுவி பாலில் விழும் என்று பார்த்தேன்... இன்னும் விழவில்லையே' என துாண்டில் போட்டு காத்திருந்தார், கருணநிதி.

ஆனால், கல்யாண மண்டபத்தை இடித்த கடுப்பில் இருந்த விஜயகாந்த், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கி, முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.

அதனால் கடுப்பான தி.மு.க., தமாஷ் நடிகர் வடிவேலுவை வைத்து, விஜயகாந்தை உருவகேலி செய்தும், அவரது மது அருந்தும் பழக்கத்தையும் இழிவாக கேலி செய்து, மக்கள் மத்தியில் அவரது இமேஜை, 'டேமேஜ்' செய்ய முயன்றது.

'கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கிணங்க' அந்த தேர்தலில் தி.மு.க., டிபாசிட் இழந்தது.

மக்கள் நல கூட்டணி வெற்றி பெறவில்லை என்றாலும், விஜயகாந்தின் நேர்மையும், அசாத்திய துணிச்சலும் இன்றளவிலும் மக்களால் பேசப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் மறைவிற்கு பின், தற்போது, கட்சியின் லகானை பிடித்திருக்கும் அவரது மனைவி பிரேமலதா, 'நஷ்டக்கணக்கில் இஷ்டமில்லை' எனும் முடிவுக்கு வந்துவிட்டார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தால், கைக்காசை செலவழித்து, ஊர் ஊராக அலைந்து, வியர்வை சிந்தி உழைக்க வேண்டும்.

அதேநேரம், தி.மு.க., வுடன் கூட்டணி என்றால், அக்கட்சியே எல்லாவற்றையும், 'கவனித்து' கொள்ளும்; தம்பி சுதீஷ் மற்றும் மகன்களை சுலபமாக, 'கரை' சேர்த்து விடலாம் என்று அவர் போட்ட லாபக்கணக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், தே.மு.தி.க., என்ற பழத்தை, தி.மு.க., என்ற பாலில் விழ வைத்துள் ளது.

'மண்டபத்தை இடித்தவர்களிடமே மனதைக் கொடுக்கலாமா...' என்று தே.மு.தி.க., தொண்டர்கள் புலம்பினாலும், தலைமைக்கோ, குடும்பத்தின் எதிர்காலமே முக்கியமாகத் தெரிகிறது.

வரும் சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுவதால், சொற்ப ஓட்டுகள் கூட வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால், தருமபுரி, விருதுநகர், விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் உள்ள, விஜயகாந்த் விசுவாசிகளை வளைக்க ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.

இப்படி பிரேமலதா லாப கணக்கும், ஸ்டாலின் ஓட்டு கணக்கும் போட்டுள்ளனர்.

ஆனால், மக்கள் தங்கள் மனதிற்குள் என்ன கணக்கு போட்டு வைத்துள்ளனர் என்பது தேர்தல் முடிவிற்கு பின் தெரிந்து விடும்!

lll

Advertisement