இதே நாளில் அன்று

மார்ச் 1:

சென்னை, கோபாலபுரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியின் மகனாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் மு.க.ஸ்டாலின்.
இவருக்கு, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக, அவரது பெயரை கருணாநிதி சூட்டினார். இவர், பள்ளி படிப்பை சென்னை எம்.சி.சி., பள்ளியிலும், பி.ஏ., படிப்பை மாநில கல்லுாரியிலும் முடித்தார்.

மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு, தி.மு.க., இளைஞரணியை உருவாக்கி, அதன் செயலராக, 40 ஆண்டுகள் நீடித்தார். 1976ல், 'மிசா' சட்டத்தில் கைதானார். 1989ல், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானார்.

கடந்த 1996ல், சென்னை மாநகராட்சி மேயராகி, 'சிங்கார சென்னை' திட்டத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் பூங்காக்களை அமைத்தார். 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சர், 2009ல் துணை முதல்வர் பொறுப்புகளை வகித்தார்.

கடந்த 2018ல் தி.மு.க., தலைவராகி, 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக தொடர்கிறார். கொரோனா ஒழிப்பு, மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பஸ் பயணம், மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண், காலை உணவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

இவரது, 73வது பிறந்த தினம் இன்று!

Advertisement