காங்.,நிர்வாகி அசைவ விருந்தில் தள்ளு முள்ளால் பதட்டம்

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் காங்.,நிர்வாகி நடத்திய அசைவ விருந்தில் பங்கேற்க பெண்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முண்டியடித்து சென்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் கீழே விழுந்தனர்.

தமிழக காங்., பொதுச்செயலாளர் சிவகங்கையைச் சேர்ந்த பச்சேரி சுந்தரராஜன். இவர் வரும் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட சீட் பெற முயற்சித்து வருகிறார்.

இதற்காக தொகுதி முழுவதும் பல்வேறு சமூக பணிகளுக்கு செலவு செய்ய துவங்கியுள்ளார்.

கீழப்பூங்குடியில் சொந்த செலவில் உயர்மின் கோபுரங்கள், பயணிகள் நிழற்குடை, பேவர்பிளாக் சாலை, அரசு பள்ளிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து இந்த பணிகளுக்கான தொடக்க விழாவை நேற்று கீழப்பூங்குடியில் நடத்தினார்.

அப்பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி., கார்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட தி.மு.க., காங்., நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

அசைவ விருந்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உணவு அருந்தும் கூடாரத்திற்குள் முண்டி அடித்துகொண்டு நுழைந்தனர். இதில் சிலர் கீழே விழுந்தனர். ஒருசிலர் கை குழந்தைகளுடன் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement