மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை


புதுடில்லி: மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி இன்று இரவு அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டில்லி திரும்பிய உடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், தேவைப்பட்டால் அவர்களை சிறப்பு விமானங்களில் இந்தியா அழைத்து வருவது பற்றியும் விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Advertisement