தந்தை கொலை: மகனுக்கு வலை

அன்னுார்: அன்னுார் அருகே, தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை, போலீசார் தேடுகின்றனர்.

அன்னுார் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 61. அன்னுார் பாரதி நகரில் வசிக்கும் இவரது மகன் ராஜசேகருக்கு, இப்பகுதியில், 2017ல், மூன்று சென்ட் இடத்துடன் வீட்டை, விஸ்வநாதன் எழுதிக் கொடுத்தார்.

செலவுக்கு மகன் பணம் தராததால், கோவை வடக்கு ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்து, அந்த வீட்டை, மீண்டும் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டார்.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம், 'வீட்டை மகனுக்கு வழங்கியது செல்லும்; மாதம் ஐந்தாயிரம் ரூபாய், தந்தைக்கு மகன் தரவேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது.

இருந்தும், மாதாந்திர செலவுக்கு பணம் தராததால், விஸ்வநாதன் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அடுத்த வாரம் விசாரணை நடக்கவுள்ளது.

நேற்று மதியம், ராஜசேகர், தந்தை வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். ஆவேசமடைந்த இவர், தந்தை தலையில் ஹாலோ பிளாக் கல்லால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் பலியானார். அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனை தேடி வருகின்றனர்.

Advertisement