தொடரும் போர் பதட்டம்; சவுதி இளவரசர், பஹ்ரைன் மன்னருடன் மோடி போனில் பேச்சு

16

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார்.


மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதனால், மேற்காசியாவில் போர் பதற்றம் தீவிரமாக உள்ளது. இந்த நாடுகளில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். மேற்காசியாவில் உள்ள நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில் இன்று மோடி 2 முக்கியமான தொலைபேசி உரையாடல்களை நடத்தினார். அவர் போர் பதற்றம் தொடர்பாக, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.


இந்த இரு நாடுகளிலும் நடந்த தாக்குதல்களை பிரதமர் மோடிகண்டித்ததோடு, இரு நாடுகளிலும் உள்ள இந்திய சமூகத்தினர் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களை போர் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


@block_Y@

பிரதமர் மோடி பதிவு

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பேசினேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.


பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிக முக்கியமானது. இந்த கடினமான நேரத்தில் இந்திய சமூகத்தினரை கவனித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். பஹ்ரைன் மன்னருடன் தொலைபேசியில் பேசினேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்திற்கு அளித்த ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_Y

Advertisement