பாலக்கோடு வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

பென்னாகரம்: மொரப்பூர் காப்புக்காட்டில், பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மொரப்பூர் காப்புக்காட்டில் வனத்துறை அலுவலர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது ஏரிமலை பிரிவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது.

மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம், அவரது தலைமையில், பாலக்கோடு ரேஞ்சர் கார்த்திகேயன், அரசு அல்லாத அமைப்பு பிரதிநிதிகள், ஓசூர் கோட்ட வனக்கால்நடை மருத்துவர் குழுவினர் அங்கு சென்று, இறந்து கிடந்த யானையை உடற்கூறாய்வு செய்தனர்.

இதில், யானையின் வயிற்றில் குட்டி ஒன்று இருந்தது. கால்நடை மருத்துவர்களின் முதல்கட்ட அறிக்கையில் உயிரிழந்தது, 17 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும், பிரசவிக்கும்போது ஏற்பட்ட சிக்கலில் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

Advertisement