நெஞ்சம் எல்லாம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் காம்பிர் பாராட்டு

1

கொல்கட்டா: ''உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,'' என காம்பிர் பாராட்டினார்.

கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், கேப்டன் சூர்யகுமார் விரைவில் அவுட்டான போதும், சஞ்சு சாம்சன் துாணாக நின்று விளையாடி, ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார். 50 பந்தில் 97* ரன் (12x4, 4x6), விளாசி, வெற்றி நாயகனாக ஜொலித்தார்.


இது குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் காம்பிர் கூறியது: சர்வதேச 'டி-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் சாம்சன். உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம். ஜிம்பாப்வேக்கு எதிராக நல்ல துவக்கத்தை எதிர்பார்த்தோம். இதற்கேற்ப 15 பந்தில் 24 ரன் விளாசினார். வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். நாலாபுறமும் பேட்டை சுழற்றவில்லை. வழக்கமான கிரிக்கெட் 'ஷாட்' தான் அடித்தார். நிலைமையை உணர்ந்து பந்தை துாக்கி அடிக்கவில்லை. மைதானத்தில் செல்லும்படி தாழ்வாக அடித்தார். ஒன்று, இரண்டு ரன் எளிதாக எடுத்தார். இவரது 'ஸ்டிரைக் ரேட்' 194 என வலுவாக இருந்தது. உலகக்தரம் வாய்ந்த வீரர் என எப்போதும் பாராட்டுவேன். வரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என நம்புகிறேன்.


சவாலான இங்கிலாந்து: கிரிக்கெட் என்பது அணியாக விளையாடுவது. இதில் அனைத்து வீரருக்கும் பங்கு உண்டு. சாம்சன் எடுத்த 97 ரன் போல, ஷிவம் துபே அடித்த இரு பவுண்டரிகளும் முக்கியமானது. பெரிய பங்களிப்பு மட்டும் தலைப்பு செய்தியாகிறது. சிறிய பங்களிப்பும் வெற்றிக்கு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை புள்ளிவிபரங்கள் முக்கியமல்ல. 'டி-20' போட்டியில் வீரர்களின் உள்ளுணர்வுபடி செயல்படுவதே முக்கியம். பும்ரா, வருண், அர்ஷ்தீப் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம்.

அரையிறுதி கடினமான மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்திய வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக 'ஸ்பெஷல்' ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடித் தருவர் என நம்புகிறேன்.


இவ்வாறு காம்பிர் கூறினார்.

அலைபேசி 'சுவிட்ச் ஆப்'
சாம்சன் கூறுகையில்,''எனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இழந்த 'பார்மை' மீட்க முயற்சித்தேன். முதலில் அலைபேசியை 'சுவிட்ச் ஆப்' செய்தேன். 'சோசியல் மீடியா' பக்கம் செல்லவில்லை. என் மனம் சொல்வதை மட்டும் கேட்டேன். சரியான 'ஷாட்' தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினேன். வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்ததால், 196 ரன்னை 'சேஸ்' செய்வது சவாலானதாக இருந்தது. இந்த சமயத்தில் எனது அனுபவம் கைகொடுத்தது. கோலி, ரோகித் சர்மா, தோனி போன்ற மகத்தான வீரர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றேன். இவர்கள் சூழலுக்கு ஏற்ப விளையாடுவதை பார்த்திருக்கிறேன். இதுவும் எனக்கு உதவியது. கடைசி வரை நிலைத்து நின்று போட்டியை வெற்றிகரமாக முடிப்பதே இலக்காக இருந்தது. இது போன்ற நாளை தான் இந்தியாவில் உள்ள நுாற்றுக்கணக்காக கிரிக்கெட் வீரர்கள் கனவு காண்பர். கேரளாவின் திருனந்தபுரத்தில் இருந்து வந்த நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும்; முக்கியமான போட்டியில் வெற்றி தேடித்தர வேண்டுமென கனவு கண்டேன். எனது கனவு நனவானது,''என்றார்.


ஏ+ அந்தஸ்து

துவக்க வீரராக வந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், 33 பந்தில் 32 ரன் (ஸ்டிரைக் ரேட் 96.96) எடுத்தார். இதனால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. ஹோப் கூறுகையில்,''கேப்டனாக தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். நான் விரைவாக ரன் எடுத்திருக்க வேண்டும். 'பவர்பிளே' முடிவில் 65-70 ரன் எட்டியிருக்க வேண்டும். சாம்சன் திட்டமிட்டு விளையாடினார். சரியான 'ஷாட்' தேர்வு செய்தார். இவரது ஆட்டத்திற்கு ஏ+ அந்தஸ்து வழங்கலாம்,''என்றார்.


நழுவிய சதம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''சாம்சன் சிறப்பாக விளையாட வேண்டுமென அனைவரும் விரும்பினோம். 97 ரன் விளாசியதால், தற்போது நெருக்கடி குறைந்திருக்கும். வெற்றிக்கான ரன்னை அடித்த போது, சாம்சன் முகத்தில் உணர்ச்சிவசத்தை பார்க்க முடிந்தது. முக்கிய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது, கனவு நனவான தருணம். சதம் எட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வரும் போட்டியில் சதம் விளாசி, குறை தீர்ப்பார். 196 ரன்னை சேஸ் செய்வது எளிதானது அல்ல. இந்திய வீரர்கள் அதிக 'டாட் பால்' கொடுக்கவில்லை. ஒன்று, இரண்டு ரன் எடுத்ததால், வெற்றி சாத்தியமானது,''என்றார்.


வாய்ப்பு உறுதி
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,''கிரிக்கெட் வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தவர் சாம்சன். 'டி-20' உலக கோப்பை தொடருக்கு முன் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருந்தது. தற்போது 97 ரன் விளாசி, அரையிறுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இவருக்கு இந்திய 'ஒயிட் பால்' அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். வெஸ்ட்இண்டீசைவிட வலுவான அணி இங்கிலாந்து. இதனை உணர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்,''என்றார்.


நல்லதே நடக்கும்
சாம்சன் ஆட்டத்திற்கு தலைவணங்கிய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,''நல்லவர்களுக்கு சரியான நேரத்தில் நல்லது நடக்கும். இது சாம்சனுக்கும் நடந்துள்ளது. துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனிநபராக சாதித்தார். இவருக்கே அனைத்து பெருமையும் சேரும்,''என்றார்.

Advertisement