சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த போலீஸ் துறை தயார்: நமச்சிவாயம்

1

புதுச்சேரி: முடங்கிக்கிடந்த திட்டங்களை நிறைவேற்றி புதுச்சேரி போலீஸ் துறையை, இந்திய அளவில் தலைநிமிரச் செய்துள்ளோம், என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த பிரதமர் விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கான பாராட்டு விழா போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், ஊர்க்காவல் படையினர் 6 பேருக்கு போலீஸ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் இன்று வரை, போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையில் இருந்த 1,546 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், நீண்ட காலமாக பதவி உயர்வின்றி தவித்த 2,704 போலீசாருக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் துறைக்கு தேவையான நிதியை முதல்வர் ரங்கசாமி எவ்வித தடையின்றி வழங்கி வருகிறார். ​போலீசாருக்கு வழங்க வேண்டிய 13வது மாத ஊதியம் தடையின்றி, வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வீர மங்கை திட்டம், ஆபரேஷன் விடியல் மற்றும் திரிசூல் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இதனால், போதைப்பொருள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சைபர் குற்றங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில் நடந்த போலீஸ் மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புதுச்சேரி போலீஸ் துறையை பாராட்டியது இந்த ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

​நடிகர் விஜய் புதுச்சேரிக்கு வந்தபோது, மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கினோம். அதேபோல், காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் பங்கேற்ற பிரம்மாண்ட விழாக்களில் போலீசார் இரவு பகலாக பணியாற்றி அமைதியை உறுதி செய்தனர்.

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, அமைதியான முறையில் தேர்தலை நடத்த புதுச்சேரி போலீஸ் துறை தயாராக உள்ளது. 2021-ல் காட்டிய அதே அர்ப்பணிப்பை இந்தத் தேர்தலிலும் நமது போலீசார் வெளிப்படுத்துவார்கள்.

மக்கள் விரும்பும் ஆட்சி அமைய, ஒரு அமைதியான ஜனநாயகத் தேர்தலை நடத்திக் காட்டுவோம் என்றார்.

விழாவில், டி.ஜி.பி.,ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்யசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் ஏ.கே. லால், கலைவாணன்,ராகவ்,திவ்யா, லக்ஷ்மி சவுஜன்யா,நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement