31 லட்சம் டன்னை தாண்டியது தமிழகத்தில் நெல் கொள்முதல்
சென்னை: தமிழக விவசாயிகளிடம் நடப்பு சீசனில் நேற்று முன்தினம் வரை, 31.10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
கடந்த, 2025 செப்., 1ல் துவங்கிய நடப்பு கொள்முதல் சீசன், இந்தாண்டு ஆகஸ்டில் முடிவடைகிறது.
இந்த சீசனில் நேற்று முன்தினம் வரை, 3.66 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 31.10 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பங்கு, 22 லட்சம் டன் என்றளவில் உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கியதற்காக, மத்திய - மாநில அரசுகளின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 7,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில், இதே காலத்தில், 20.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த சீசனில் நேற்று முன்தினம் வரை கூடுதலாக, 10.60 லட்சம் டன் நெல் கிடைத்துள்ளது.
இந்த சீசன் முடிவடைய, ஆறு மாதங்கள் இருப்பதால், நெல் கொள்முதல், 50 லட்சம் டன்னை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில், 48 லட்சம் டன் நெல் கிடைத்தது.