'ஹோலி'... யாருக்கு 'ஜாலி' * மல்லுக்கட்டும் மார்க்ரம்-சான்ட்னர்
கொல்கட்டா: வண்ணங்களின் பண்டிகையான இன்றைய 'ஹோலி' நாளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும்.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இரு அணி கேப்டன்கள் மார்க்ரம், சான்ட்னர் நல்ல 'பார்மில்' இருப்பதால், ஆட்டத்தின் அனல் பறக்கும்.
மிரட்டும் நிகிடி
ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டியில் சோபிக்காததால், 'சோக்கர்ஸ்' என தென் ஆப்ரிக்காவை விமர்சிப்பர். புதிய பயிற்சியாளர் ஷுக்ரி கோன்ராட் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது வியூகத்தில், ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (2025) வென்றது. தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில் அசுர பலத்தில் உள்ளது. லீக், 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் உட்பட வலிமையான அணிகளை சாய்த்தது. நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. கேப்டன் மார்க்ரம், 268 ரன் (7 போட்டி, 'ஸ்டிரைக் ரேட்' 175.16) குவித்துள்ளார். 'பவர் பிளே' ஓவரில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ரிக்கிள்டன் (228 ரன், ஸ்டிரைக் ரேட் 171.42), குயின்டன் டி காக் (171), பிரவிஸ் (173), 'கில்லர்' மில்லர் (168), ஸ்டப்ஸ், யான்சென் என அதிரடி பேட்டர்கள் இருப்பது பலம்.
வேகப்பந்துவீச்சில் நிகிடி (6 போட்டி, 12 விக்., எகானமி 6.87) மிரட்டுகிறார். இவரது 'ஸ்லோ வைடு யார்க்கர்', 'ஸ்லோ லெக் கட்டர்' வகை பந்துகள் நியூசிலாந்துக்கு சவாலாக இருக்கும். இவருக்கு பக்கபலமாக ரபாடா, யான்சென், பாஷ் உள்ளனர். 'சுழலில்' கேஷவ் மஹாராஜ், மார்க்ரம் அசத்தினால், ஐ.சி.சி., 'ஒயிட்பால்' கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்கலாம்.
ரச்சின் நம்பிக்கை
நியூசிலாந்து அணி 'ரன் ரேட்' அடிப்படையில் தான் அரையிறுதி வாய்ப்பை பெற்றது. துவக்கத்தில் டிம் செய்பர்ட் (7 போட்டி, 216 ரன், ஸ்டிரைக் ரேட் 157.66) விளாசுவது பலம். கிளன் பிலிப்ஸ் (176), ஆலன் (189), ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்சல் ரன் குவிக்கலாம். கேப்டன் சான்ட்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார். 'சுழலில்' மிரட்டும் இவர், அணிக்கு தேவையான போது பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார். பந்துவீச்சில் ரச்சின் ரவிந்திரா (9 விக்), பெர்குசன், மாட் ஹென்றி, மெக்கோன்ச்சி, இஷ் சோதி கைகொடுக்கலாம்.
5-0
'டி-20' உலக கோப்பை அரங்கில் ஏற்கனவே மோதிய 5 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது.
* 2015ல் நடந்த பரபரப்பான உலக கோப்பை அரையிறுதியில் (50 ஓவர்) நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை வென்றது. இம்முறை 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்தை வீழ்த்தி, பதிலடி கொடுத்தது.
* கொல்கட்டா, ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* கொல்கட்டாவில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
மேலும்
-
கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்... முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்
-
தான்தோன்றிமலையில் ரூ.3.32 கோடிக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
-
749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்
-
மாசி திருக்கல்யாண உத்சவம் வல்லக்கோட்டையில் விமரிசை
-
கடவூரில் மாசிமக பெருவிழா தேரோட்டம் வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
-
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் காஞ்சிபுரம் அதிகாரிகளுக்கு தலைவலி