போலி அறக்கட்டளை பெயரில் ரூ.29 லட்சம் மோசடி: மூவர் கைது

பெரம்பலுார்:போலி அறக்கட்டளை பெயரில், பொதுமக்களை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.


பெரம்பலுார் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், தனியார் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வந்தது. மெழுகுவர்த்தி, ஊதுவத்தி தயாரிப்பு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வட்டியில்லா வங்கிக்கடன் உதவி மற்றும் நிதி உதவி ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தது.



அதை நம்பி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, சத்தியா, மரகதம், பூங்கோதை ஆகியோர், நிதியுதவி பெற்று தரக்கோரி, அறக்கட்டளை நிர்வாகிகளிடம், 29.75 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பல மாதங்களாகியும், எவ்வித நிதியுதவியும் பெற்றுத் தராததால், பாதிக்கப்பட்ட சத்தியா, 42, கொடுத்த புகார்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.
அதில், போலியான அறக்கட்டளை நடத்தி, பயிற்சி அளிப்பதாக கூறி, பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் செல்லம், 55, இருதயபுரம் தேவக்குமார், 55, பெரம்பலுார் மாவட்டம், நெய்குப்பை பார்த்தசாரதி, 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement