மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

புதுக்கோட்டை:
டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய தற்காலிக ஊழியர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன், 48, மின்வாரிய தற்காலிக ஊழியர். நேற்று, கொடிக்குளம் துணை மின் நிலையத்திலிருந்து மின் துண்டிப்பு அறிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
அதன்படி, குமரேசன் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மின்சாரம் ரத்து செய்யப்பட்டிருந்த வேளையில், எப்படி மின்சாரம் பாய்ந்தது என்று கூறி, அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில், மறியல் செய்தனர்.


மேலும், அஜாக்கிரதையாக பணிபுரிந்த மின்வாரியத்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை, கோட்டைப்பட்டினத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement