சாராய விற்பனையை தட்டி கேட்டவர்கள் கொலை: இழப்பீடு தாமதத்தால் மறியல்

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் 2025ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு அதே ஊரை சேர்ந்த ஹரிஷ், பேச்சாவடி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவன் ஹரி சக்தி, ஆகியோர் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.


அப்போது, கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்டதால் ஏற்பட்ட முன் விரோதத்தால், கொலை சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டி, கொலையானவர்களின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் வருவாய் துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு பெற்று தருவதாக உறுதி அளித்தபின், போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கொலை நடந்து ஓராண்டு கடந்த நிலையில் இதுவரை இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து, மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன், கொலையானவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement